ஜூன் 6ஆம் திகதியே இறுதியானது அதன் பின்னர் சஜித்துடன் விவாதம் இல்லை : அனுர
சஜித் பிரேமதாச மற்றும் அனுரகுமார திஸாநாயக்க ஆகிய இரண்டு அரசியல் தலைவர்களுக்கிடையில் ஏற்கனவே அறிவித்தபடி ஜூன் 6ஆம் திகதி விவாதம் நடத்துவதற்கு, ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இல்லை என்றால், அதற்கு பின்னர், அது தொடர்பான விவாதங்கள் எதுவும் இருக்காது என தேசிய மக்கள் சக்தி இன்று (28) தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தேசிய மக்கள் சக்தி செயற்குழு உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ, ஜூன் 6 ஆம் திகதி திட்டமிடப்பட்ட விவாதம் நடத்தப்படுவது உறுதியானால், விவாதத்திற்கான தயாரிப்புகள் குறித்து கலந்துரையாடலில் ஈடுபட தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
பிரதான வேட்பாளர்கள்
மேலும், இதற்காக தொலைக்காட்சி அலைவரிசை அல்லது விவாதம் நடத்தும் இடம் பற்றி முடிவு செய்வதே தற்போது மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகளாக உள்ளன.
எனினும் ஏனைய முட்டாள்தனங்களுக்கு வீண்விரயம் செய்ய தமது கட்சிக்கு நேரமில்லை.அரசியல் நகைச்சுவையாக கூறப்பட்டிருந்தாலும் கூட, ஜூன் 6 ஆம் திகதியன்று உத்தேசிக்கப்பட்ட விவாதம் குறித்து, பிரேமதாச மற்றும் நளின் பண்டார ஆகியோருக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.
ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரதான வேட்பாளர்களுக்கிடையில் விவாதம் நடத்துவது உலக நடைமுறையாகும்.
இதன்படி அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கும் டொனால்ட் ட்ரம்பிற்கும் இடையில் இரண்டு விவாதங்கள் ஜூலை 27 மற்றும் செப்டம்பர் 7 ஆம் திகதிகளில் திட்டமிடப்பட்டுள்ளன. இந்த விவாதத்தை எந்த வேட்பாளரும் வலிந்து கேட்கவில்லை.
மாறாக, ஜனாதிபதி தேர்தல் ஒன்று வரப்போகிறது என்றால், இரண்டு முக்கிய வேட்பாளர்களின் கொள்கைகளை மக்கள் அறிந்து கொள்வது முக்கியம் என்ற அடிப்படையிலேயே இந்த விவாதங்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |