வட்டுவாகலில் ஊடகவியலாளர் மீதான அச்சுறுத்தல்: விசாரணைக்கு அழைப்பு
ஊடகவியலாளர் கணபதிப்பிள்ளை குமணனிடம் வாக்குமூலம் ஒன்றை பெறுவதற்காக எதிர்வரும் 29.12.2022 அன்று காலை 10.00 மணிக்கு முல்லைத்தீவு உதவி பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்துக்கு வருகை தருமாறு பொலிஸாரினால் அழைப்பு கடிதம் ஒன்று வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பின்னணி
முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வட்டுவாகல் பகுதியில் அமைந்துள்ள கோட்டாபய கடற்படை தளத்துக்கு தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகளை சுவீகரிப்பதற்காக அளவீட்டுப் பணிகள் கடந்த 07.06.2022 இடம்பெறவிருந்த நிலையில், அதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து காணி உரிமையாளர்களான தமிழ் மக்களும், மக்கள் பிரதிநிதிகளும் முல்லைத்தீவு வட்டுவாகல் கோட்டாபய கடற்படை முகாம் முன்பாக போராட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.
இதனை செய்தி அறிக்கையிடுவதற்காக சென்றிருந்த ஊடகவியலாளர் கணபதிப்பிள்ளை குமணனின் கடமைக்கு முல்லைத்தீவு பொலிஸார் மற்றும் புலனாய்வாளர்களால் இடையூறு மேற்கொள்ளப்பட்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது.
விசாரணைக்கு அழைப்பு
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் ஊடகவியலாளர் கணபதிப்பிள்ளை குமணனிடம் வாக்குமூலம் பெறுவதற்காக எதிர்வரும் 29.12.2022 அன்று காலை 10.00
மணிக்கு முல்லைத்தீவு உதவி பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்துக்கு வருகை
தருமாறு நேற்று மாலை முல்லைத்தீவு ஊடக அமையத்திற்கு வருகை தந்த பொலிஸார்
ஊடகவியலாளர் கணபதிப்பிள்ளை குமணனிடம் அழைப்பு கடிதத்தை வழங்கியுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
இருப்பினும் குறித்த அழைப்பு கடிதத்தை சிங்கள மொழியில் வழங்கியுள்ளதோடு உரிய
காரணங்கள் தெரிவிக்கப்படாமல் அழைப்பு கடிதம் வழங்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


