ஊடகவியலாளர் நிமலராஜன் படுகொலை: பிரித்தானியாவில் ஒருவர் கைது - வரவேற்கும் மனித உரிமை அமைப்புக்கள்
பிபிசி இன் செய்தியாளர் நிமலராஜன் மயில்வாகனம் யாழ்ப்பாணத்தில் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இலங்கையைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவர் பிரித்தானிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டதை மனித உரிமை அமைப்புக்கள் வரவேற்றுள்ளன.
இவ் விடயம் தொடர்பில் மனித உரிமைகள் அமைப்புக்கள் நேற்று வெளியிட்ட ஊடக அறிக்கையில் மேலும்,
இந்தப் படுகொலை தொடர்பில் நடாத்தப்பட்ட விசாரணையின் பின்னர் 48 வயதுடைய நபரின் கைதினை மொற்றோபொலிட்டன் பொலிஸாரின் போர்க்குற்ற குழு மேற்கொண்டதாக அவர்கள் அறிவித்துள்ளதுடன் கைது செய்யப்பட்டவரின் பெயரை அவர்கள் குறிப்பிடவில்லை.
இந்தக் கைதிற்கு வழியமைத்துள்ள இந்த செயலூக்கமான விசாரணையானது இருபத்தி இரண்டு வருடங்களுக்குப் பின்னர் கூட நீதி மற்றும் பொறுப்புக்கூறல் மீதான மெட்றோபொலிட்டன் பொலிஸாரின் ஈடுபாட்டினைக் காட்டுகின்றது. ஊடகவியலாளர்களைக் கொல்பவர்கள் உலகில் எங்கும் பாதுகாப்பாக இருக்கமுடியாது.
பிபிசி செய்தியளரை கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவர் பிரித்தானியாவில் ஒளித்திருக்கலாம் என்பது வெறுக்கத்தக்கது என இலங்கையின் போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை விசாரணை செய்யும் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டத்தினைச் சேர்ந்த ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.
19 ஒக்டோபர் 2000 இல் இடம்பெற்ற நிமலராஜன் மயில்வாகனத்தின் படுகொலையானது இலங்கை இனப்போரில் ஊடகவியலாளர் படுகொலைகளின் இரத்தம் படிந்த ஒரு பாதையின் தொடக்கமாக இருந்தது. இதில் பாதிக்கப்பட்டவர்களின் அநேகமானவர்கள் தமிழர்களாக உள்ளார்கள்.
சந்தேக நபர் பிரித்தானியாவின் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றின் சட்டம் 2001 இன் 51 ஆவது பிரிவின் கீழ் குற்றங்கள் புரிந்தமைக்கான சந்தேகத்தின் பேரில்க் கைது செய்யப்பட்டார்.
இது உலகளாவிய அதிகாரவரம்புக் கோட்பாடுகளின் கீழ் உலகில் போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனஅழிப்பு என்பன இடம்பெறும் போது அவற்றுக்கு எதிராக வழங்குகளை மேற்கொள்வதற்கு பிரித்தானியாவிற்கு அனுமதியளிக்கின்றது.
தண்டனையிலிருந்து பாதுகாப்பு வழங்கப்படுதல் சகித்துக் கொள்ளப்பட மாட்டாது அத்துடன் இலங்கை போன்ற நாடுகள் தண்டனை வழங்காவிட்டால் வேறு தெரிவுகள் உண்டு என்பதற்கு ஒரு அடையாளமாக இந்த வழக்கு பெரிதும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது என REDRESS இனைச் சேர்ந்த சாளி லூடன் தெரிவித்துள்ளார்.
இலங்கை அதிகாரிகளின் ஒத்துழைப்பு இல்லாமல் கூட இந்த வழக்கில் பிரித்தானிய பொலிஸார் நீதியை நிலைநாட்டுவார்கள் என நாம் நம்புகின்றோம்.
2004 இற்கும் 2010 இற்கும் இடையில் இலங்கையில் கொல்லப்பட்ட 44 ஊடகவியலாளர்களின் பெயர்களை ஆவணப்படுத்தியுள்ள இலங்கையில் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் என்ற அமைப்பு இந்த வழக்கு விசாரணை ஒரு முக்கிய முன்னுதாரணமாக உள்ளது என்று தெரிவித்துள்ளது.
'இரண்டு தசாப்தங்களுக்குப் பின்னர் கூட, மோசமான குற்றங்களைப் புரிந்த சந்தேகநபர்கள் மற்றும் தண்டனையில் இருந்து பாதுகாப்பினை அனுபவித்தவர்கள் அவர்கள் எங்கு வசித்தாலும் தமது நடவடிக்கைகளுக்குரிய சட்டரீதியான பின்விளைவுகளுக்கு முகங்கொடுக்க வேண்டியிருக்கும்.
ஆகவே நிமலராஜனுக்கான நீதியினைப் பெற்றுக் கொள்ளுதல் என்பது குற்றம் புரிந்தவர்களுக்கும் மோசமான குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கும் தெளிவான ஒரு செய்தியினை தெரிவிக்கின்றது.
யாழ்ப்பாணத்தில் பிபிசி சிங்கள சேவையின் செய்தியாளராகப் பணிபுரிந்து வந்த நிமலராஜன் ஊரடங்கு அமுலில் இருந்த வேளையில் மூன்று இராணுவச் சோதனை நிலையங்களுக்கு இடையில் அமைந்திருந்த அவரது வீட்டில் வைத்து பிபிசி வானொலி கேட்டுக்கொண்டிருந்த போது கொல்லப்பட்டார். அவரது குடும்ப உறுப்பினர்களும் இந்த தாக்குதலில் காயமடைந்தார்கள்.
இறுக்கமான பாதுகாப்பு இருந்த போதிலும் மக்கள் குடியிருப்பு பகுதியில் சுட்டுவிட்டு கைக்குண்டினை வெடிக்க வைத்த வேளையில் தாக்குகுதல் நடாத்தியவர்கள் கைது செய்யப்படவில்லை.
இதேவேளையில் இதற்கு முரணாக தாக்குதல் நடத்தியவர்களைத் தடுப்பதற்கு தவறிய பல இராணுவச் சோதனை நிலையங்களை இலாந்தர் விளக்கினை அசைத்துக் காட்டியபடி இறுக்கமான பாதுகாப்பின் கீழ் அருகிலுள்ள வைத்தியசாலைக்கு இறந்த உடலினையும் காயப்பட்டவர்களையும் கொண்டு செல்வதற்கு குடும்பத்தவர்களுக்கு ஒரு மணி நேரம் எடுத்தது.
மே 2021 இல் இந்தக் கொலைச் சந்தேக நபர்களுக்கு எதிராக ஒரு வழக்கு இலங்கையில் தள்ளுபடி செய்யப்பட்டு சந்தேக நபர்கள் விடுவிக்கப்பட்டார்கள், இருந்த போதிலும் இருவர் வெளிநாட்டில் இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
அவர்களைக் கைது செய்வதற்கு ஒரு சர்வதேசப் பிடியாணை இலங்கை அதிகாரிகளால் எப்போதாவது விடுக்கப்பட்டதா என்பது பற்றி தெளிவாகத் தெரியவில்லை.
கடந்தமுறை உலகளாவிய அதிகார வரம்பின் கீழ் பிரித்தானியா வெற்றிகரமாக ஒரு வழக்கினை மேற்கொண்டு 2005 இல் ஆப்கானைச் சேர்ந்த ஒரு போர் வீரரான பாயடி ஷாடாட் என்பவருக்கு சித்திரவதை மற்றும் பணயக்கைதிகளாகப் பிடித்தல் என்பவற்றுக்காக குற்றவாளியாகக் காணப்பட்டார்.
அதிலிருந்து பிரபலமான இரண்டு வழக்குகளான நேபாளத்தைச் சேர்ந்த கேணலான குமார் லாமா இன் வழக்கு 2016 இலும் அத்துடன் 2019 இல் லைபீரியாவின் ஜனாதிபதியான சாள்ஸ் ரெயிலரின் முன்னாள் மனைவியான அக்நெஸ் றீவெஸ் ரெயிலரின் வழக்கு 2019 இலும் தோல்வியடைந்தது.
நிமலராஜனின் வழக்கானது போர்க்குற்றங்கள் மற்றும் சர்வதேசக் குற்றங்கள் தொடர்பில் குற்றஞ்செய்தவர்களைப்
பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தக்கூடியதாக பிரித்தானியாவின் நீதிதுறை உள்ளதா என்பதற்கான ஒரு
சோதனை வழக்காக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.