படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 23ஆம் ஆண்டு நினைவேந்தல் (Photos)
யாழ்ப்பாணத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 23ஆம் ஆண்டு நினைவு தின நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் (19.10.2023) அனுஷ்டிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் ஊடக அமையத்தின் தலைவர் கு. செல்வக்குமார் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், பொதுச்சுடரை ஊடக அமையத்தின் செயலாளர் க. நிதர்சன் ஏற்றி வைக்க, உருவப் படத்திற்கு மலர்மாலையை மூத்த ஊடகவியலாளர் ம.நியூட்டன் அணிவித்துள்ளார்.
தொடர்ந்து, ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மலரஞ்சலி செலுத்தினர்.
காணாமல்போன புத்தர் சிலையை கேட்டு அடம் பிடிக்கும் அம்பிட்டிய தேரர் : மட்டக்களப்பில் பொலிஸார் குவிப்பு
துப்பாக்கி பிரயோகம்
போர் சூழலில் யாழில் இருந்து , துணிவாக ஊடகப்பணியாற்றிய மயில்வாகனம் நிமலராஜன் கடந்த 2000ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 19ம் திகதி யாழ்ப்பாண மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் நடைமுறையில் இருந்த வேளை இவரது வீட்டு வளவினுள் புகுந்த ஆயுத தாரிகள், வீட்டின் ஜன்னல் ஊடாக அவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர்.
அதன் போது அவர் எழுதிக்கொண்டு இருந்த கட்டுரை மீது வீழுந்து உயிர் துறந்தார்.
கொலையாளிகள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு நிமலராஜனை படுகொலை செய்த பின்னர் வீட்டின் மீது கைக்குண்டு தாக்குதலையும் மேற்கொண்டனர்.
அதன் போது வீட்டில் இருந்த நிலமராஜனின் தந்தை சங்கரப்பிள்ளை மயில்வாகனம் , தாய் லில்லி மயில்வாகனம் மற்றும் மருமகன் ஜெகதாஸ் பிரசன்னா ஆகியோர் படுகாயமடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.
வவுனியா
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 23 ஆவது நினைவுதினம் வவுனியா ஊடக அமையத்தில் இன்று (19.10.2023) அனுஸ்டிக்கப்பட்டது.
வவுனியா ஊடக அமையத்தின் தலைவர் ப.கார்த்தீபன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், முதலாவது ஈகை சுடரினை சிரேஷ்ட ஊடகவியலாளர் கி. வசந்தரூபன் ஏற்றி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து நிமலராஜனின் உருவப்படத்திற்கு ஏனைய ஊடகவியலாளர்கள் நினைவுச்சுடரை ஏற்றியதுடன் மலரஞ்சலியினையும் செலுத்தினர்.
செய்தி- திலீபன்
முல்லைத்தீவு
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 23 ஆம் ஆண்டு நினைவேந்தல் முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்றது.
முல்லைத்தீவு ஊடக அமையத்தின் தலைவர் சண்முகம் தவசீலன் தலைமையில் இடம்பெற்ற இந்த நினைவேந்தலில் ஊடகவியலாளர்கள் மற்றும் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் , சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டு படுகொலை செய்யப்பட்ட ம.நிமலராஜன் திருவுருவ படத்திற்கு சுடர் ஏற்றி, மலர்மாலை அணிவித்து உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
செய்தி-ஷான்
மட்டக்களப்பு
மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜன் 23 வது நினைவேந்தல் காந்தி பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான நினைவு தூபியில் இடம்பெற்றுள்ளது.
இதில் ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டு படுகொலை செய்யப்பட்ட அனைத்து ஊடகவியலாளர்கள் மற்றும் இஸ்ரேல்- காஸா யுத்தத்தின் போது உயிரிழந்த ஊடகவியலாளர்களுக்காகவும் 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்.
செய்தி-பவன்
யாழ்ப்பாணம்
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 23 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைமையகத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது ஈகைச்சுடர் ஏற்றி, மலர் அஞ்சலி தூவி, மௌன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
செய்தி-கஜிந்தன்