சீன ஊடக நிறுவனங்களுடனான உடன்படிக்கை: எழுப்பப்படும் கேள்விகள்!
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் சீன விஜயத்தின் போது அந்நாட்டு ஊடக நிறுவனங்களுடன் உடன்படிக்கைகளில் செய்துக்கொள்ள அரசாங்கம் எடுத்த முடிவு குறித்து இலங்கையின் ஊடகவியலாளர் குழுக்கள் கேள்வி எழுப்பியுள்ளன.
திறன் மேம்பாட்டை நோக்கமாகக் கொண்ட சீன ஊடக நிறுவனங்களுடன் கூட்டாண்மைக்கான திட்டங்கள் அங்கீகரிக்கப்பட்டதாக அரசாங்கம் கடந்த வாரம் கூறியிருந்ததை தொடர்ந்தே இந்த கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கத்தின் தலைவர் துமிந்த சம்பத், இந்த நடவடிக்கையை விமர்சித்துள்ளார் அத்துடன் ஒப்பந்தங்கள் கேள்விக்குறியாகவே உள்ளது என்று கூறியுள்ளார்.
அரசாங்கத்தின் முடிவு
சீன ஊடகங்கள் பெரும்பாலும் சுயாதீன ஊடகங்கள் அல்ல, அரசு கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களாகவே பார்க்கப்படுகின்றன.
இலங்கை ஊடகவியலாளர்கள் ஊடக சுதந்திரத்தை உறுதி செய்வதற்காக, குறிப்பாக அரசு ஊடகங்களின் சீர்திருத்தங்களை எதிர்பார்க்கும் நேரத்தில், அரசாங்கத்தின் இந்த முடிவு மிகவும் சந்தேகத்தை தோற்றுவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இத்தகைய ஒப்பந்தங்கள் இலங்கையின் ஊடக நிலப்பரப்பில் வெளிநாட்டு செல்வாக்கிற்கு வழி வகுக்கும் என்று சம்பத் எச்சரித்துள்ளார்.
இந்தநிலையில், நாட்டின் ஊடக சமூகத்துடனான ஆலோசனைகளை அரசாங்கம் புறக்கணிப்பதாகவும், வெளிப்படைத்தன்மை இல்லாதது ஊடக சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதற்கிடையில், சுதந்திர ஊடக இயக்கத்தின் லசந்த டி சில்வாவும் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்
கையெழுத்திடுவதற்கு முன்னர், ஒப்பந்தங்களின் உள்ளடக்கங்களை வெளியிடுமாறு அரசாங்கத்திடம் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சமூகப் பொறுப்பு
ஊடகங்கள் அரசாங்கத்தின் ஊதுகுழல்களாக இல்லாமல் சமூகப் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்ற கோரிக்கையின் மத்தியில் அரசாங்கம் எதனை செய்ய விரும்புகிறது என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிகாரிகள் மற்றும் ஊடகவியலாளர்களின் திறன் மேம்பாட்டுத் திட்டங்களை எளிதாக்குவதற்காக இலங்கையின் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சகம் சீனாவின் தேசிய வானொலி மற்றும் தொலைக்காட்சி நிர்வாகம் மற்றும் அரசுக்குச் சொந்தமான சின்{ஹவா செய்தி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஒப்பந்தங்களில் அசோசியேட்டட் நியூஸ்பேப்பர்ஸ் ஒஃப் சிலோன் லிமிடெட் (லேக் ஹவுஸ்) மற்றும் சின்{ஹவா இடையேயான கூட்டாண்மைகள், அரசாங்க தகவல் திணைக்களம், இலங்கை ரூபவாஹினி கோர்ப்பரேசன் மற்றும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றுக்கு இடையேயான ஒத்துழைப்புகள் ஆகியவை அடங்கும் என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |