நாகர்கோவில் பாடசாலை அதிபர் உள்ளிட்டோரின் செயற்பாட்டிற்கு வன்மையான கண்டனம்
நாகர்கோவில் பாடசாலை படுகொலை நினைவேந்தல் நிகழ்விற்கு செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களை உள்ளே விடாது பாடசாலை அதிபர் மற்றும் இரு ஆசிரியர்கள் கதவினை பூட்டி தடுத்து நிறுத்தி அடாவடித்தனத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பெண் ஊடகவியலாளர் ஒருவரது ஊடக செயற்பாட்டிற்கு இடையூறு ஏற்படுத்திய ஒரு குழுவினரால் அவர் அச்சுறுத்தப்பட்டுள்ள சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், தமிழ் ஊடகத்துறை மீதான இவ்வாறான அடக்குமுறைகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என யாழ். வடமராட்சி ஊடக இல்லம் வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ளது.
"தமிழ் ஊடகத்துறை மீது காலம் காலமாக அடக்குமுறைகள், அச்சுறுத்தல்கள், நெருக்கடிகள் என பல நெருக்குவாரங்கள் அரச தரப்பினராலும், அவர்களுடன் சேர்ந்தியங்கும் தரப்பினராலும் ஏற்படுத்தப்பட்டே வருகிறது.
அதன் உச்சமாக கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டும், பலரது உயிர்கள் பறிக்கப்பட்டும் உள்ளன. தமிழ் ஊடகத்துறை மீதான அச்சுறுத்தல்கள், ஆட்சிகள் மாறினாலும் காட்சி மாற்றங்களுடன் இன்றும் தொடர்ந்த வண்ணமே உள்ளது என்பதற்கு அண்மித்த சாட்சியமாக மேற்குறித்த சம்பவங்கள் அரங்கேற்றப்பட்டுள்ளன.
தொடர் அடக்குமுறைகள்..
ஆயுத முனையில் குரல்வளை நெரிக்கப்பட்ட எமது மக்களின் குரலாக ஓங்கி ஒலித்துவரும் தமிழ் ஊடகத்துறை பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் தடம்மாறாது செயற்பட்டு வருவதன் காரணமாகவே ஈழத்தமிழினத்திற்கு இழைக்கப்பட்ட, இழைக்கப்பட்டு வரும் கொடுமைகள் உலகத்தார் முன்கொண்டு வரப்படுகிறது.
இவ்வாறான நிலையில், அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்திலும் இவ்வாறான அச்சுறுத்தல்கள் அரங்கேறியுள்ளன.
தனிமனிதர்களாகவும், குழுக்களாகவும் தமக்கு பின்னிருக்கும் நிகழ்ச்சி நிரல்களின் அடிப்படையில் தமிழ் ஊடகத்துறை மீது இவ்வாறான அடக்குமுறை செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றமையானது கடந்தகாலங்களில் இடம்பெற்ற இவ்வாறன சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் பொறுப்புக்கூறல் பொறிமுறைக்குள்ளாக தண்டிக்கப்படாமையின் விளைவாகும்.
ஜனநாயகத்தின் நான்காவது தூணாக திகழ்ந்து வரும் ஊடகத்துறை மீதான இவ்வாறன அடக்குமுறைகள், அச்சுறுத்தல்களை உடனடியாகவே தடுத்து நிறுத்துவதுடன், தமிழ் ஊடகத்துறை உள்ளிட்ட இலங்கையில் ஊடகத்துறை மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட அனைத்துவிதமான செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனையினை வழங்குவதன் ஊடாக மீளவும் அவை நிகழாது என்ற நிலையினை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றோம்” என யாழ். வடமராட்சி ஊடக இல்லம் தெரிவித்துள்ளது.



