தமிழ் ஊடக உலகிற்கு பேரிழப்பு: ஊடகவியலாளர் பாரதியின் இறப்புக்கு இரங்கல்
அச்சு ஊடகத் துறையில் ஆழமான தடங்களை பதித்த சிரேஸ்ட ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகத்தின் மறைவு, தமிழ் ஊடகத் துறைக்கு பாரிய வெற்றிடத்தை உருவாக்கி இருப்பதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
ஊடக அறம்
அவர் வெளியிட்டுள்ள ஊடகச் செய்தியில் மேலும், "அமைதியான அணுகுமுறைகளையும் ஆழமான கருத்தியலையும் கொண்டிருந்த அமரர் பாரதி, ஊடக அறத்தின் வழிநின்று அனைத்து தரப்பினருடனும் உறவுகளை பேணியவர்.
எமது கருத்துக்களில் இருக்கின்ற நியாயங்களை புரிந்து கொண்டு ஒத்துழைப்புக்களை வழங்கியவர். அன்னாரின் இழப்பு, தமிழ் ஊடகத்துறையையும் தாண்டி தமிழ் பேசும் மக்களுக்கே பேரிழப்பாக அமைந்திருக்கிறது.
அன்னாரின் இழப்பினால் துயருற்று இருக்கும் அனைவருக்கும் எமது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை, தமிழ் ஊடகத்துறையில் நிரப்ப முடியாத வெற்றிடமாக சிரேஷ்ட ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதியின் நினைவு கனத்துக் கிடக்கின்றது என்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தெரிவித்துள்ளார்.
ஈழத்தின் மூத்த ஊடக ஆளுமை இராஜநாயகம் பாரதியின் திடீர் மறைவையொட்டி அவர் நேற்று இரவு வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக் குறிப்பிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும், "பாரதி, அமைதியான பேச்சும் அதிராத சுபாவமும் உங்கள் அடையாளம், ஆழமான பார்வைகளால் அனைத்தையும் அறிந்துவைத்திருந்தவர் நீங்கள். தமிழ் ஊடகத்துறையில் நிரப்ப முடியாத வெற்றிடமாக உங்கள் நினைவு கனத்துக் கிடக்கின்றது. என்றும் நலம் நாடும் உங்கள் குரலை இழந்துவிட்டோம்“ என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலதிக தகவல் - ராகேஷ்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
![தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்](https://cdn.ibcstack.com/article/eafa3708-ce84-4e22-b6a6-518c2b23980b/25-67a890674e00d-md.webp)