சுயாதீன ஊடகவியலாளர் மீது தாக்குதல்.. சுதந்திர ஊடக இயக்கம் கடும் கண்டனம்
சுயாதீன ஊடகவியலாளர் சிசில நந்தன கெலேகம மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்துக்குச் சுதந்திர ஊடக இயக்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
தாக்குதலுக்குள்ளான மொரகொல்லாகம பிரதேச ஊடகவியலாளரான சிசில நந்தன கெலேகம, அநுராதபுரம் - பொல்பிதிகம பிரதேசத்தில் குழந்தை ஒன்று பாதுகாப்பற்ற விவசாயக் கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பில் செய்தி சேகரித்து ஊடகத்தில் வெளியிட்டுள்ளார்.
இதனால் அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தாக்குதலுக்குள்ளான ஊடகவியலாளர், குருநாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
வைத்தியசாலையில் அனுமதி
ஊடகவியலாளர் சிசில நந்தன கெலேகம, உடல்நலக் குறைவு காரணமாக ஏற்கனவே சத்திர சிகிச்சை பெற்றவர் எனவும், ஆனாலும் தொடர்ந்து ஊடகக் கடமைகளில் ஈடுபட்டிருந்தார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
தாக்குதல் காரணமாக மொரகொல்லாகம பிரதேச ஊடகவியலாளர் சிசில நந்தன கெலேகமவின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது எனவும் கூறப்படுகின்றது.
இந்தத் தாக்குதலின்போது ஊடகவியலாளரைக் காப்பற்றச் சென்ற அவரது மனைவியும் காயமடைந்துள்ளார். இது தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இருப்பினும், ஊடகவியலாளர் சிசில நந்தன கெலேகம தொடர்பில் கண்காணித்து சந்தேகநபருக்குத் தகவல் வழங்கி குற்றத்துக்கு உடந்தையாக இருந்தவர்களையும் கைது செய்து அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சுதந்திர ஊடக இயக்கம் கேட்டுக்கொண்டுள்ளது.



