ரணில் விக்ரமசிங்கவின் கைது விவகாரம்! எதிர்கட்சிகளின் தலைவர்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கை
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கைது தொடர்பில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டமைக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொழும்பில் நேற்றையதினம் ஊடக மாநாடு ஒன்றை நடத்தியிருந்தனர்.
இதனை தொடர்ந்து ரணில் விக்ரமசிங்கவின் கைது தொடர்பான தமது நிலைப்பாட்டை கூட்டறிக்கையாக வெளியிட்டுள்ளனர்.
கூட்டறிக்கை
இதற்கமைய, ரணில் விக்ரமசிங்க பிணையில் வெளிவர முடியாத குற்றத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை 'அரசியலமைப்பு ஏகபோகத்தை நோக்கி நகரும்' பல கட்சிகளுக்கு எதிரான அரச நடைமுறையாகும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி சிறையில் அடைக்கப்பட்டிருப்பது 'பல கட்சி அரசியலையும் ஜனநாயகத்தையும் சீர்குலைக்கும்'செயலாகும். இதனூடாக நாட்டின் ஜனநாயகத்தையும் அரசியலின் சுதந்திரத்தையும் பறித்து அடக்குமுறையான அரசியல் நடவடிக்கைகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாற்று நடவடிக்கைகள்
ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு சட்டத்தை தவறாக புரிந்து கொண்டு அரசியல் நோக்கங்களை அடிப்படையாக கொண்டது என்பதை அவதானிக்க முடிவதாகவும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புலனாய்வு அமைப்புகளை தமது சொந்த அரசியல் ஆளுமைகளைக் கொண்டு நிரப்பி அடிபணியச் செய்வதன் மூலம் அரச இயந்திரத்தில் இருக்க வேண்டிய சுதந்திரத்தை குறைத்து அரசாங்கத்தை நாடாளுமன்றத்தின் ஏகபோகத்திற்கு உட்படுத்துகிறார்கள் என்பது எமது நம்பிக்கை.
இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையின்படி அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் எதிர்ப்பை அடக்குவதற்கும் அடிபணிய வைப்பதற்கும் அரசாங்கத்திடம் வேறு மாற்று நடவடிக்கைகள் இல்லை என்பதே எமது புரிதலாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல கட்சி ஜனநாயகம், அரசியல் சுதந்திரம் மற்றும் அரசியல் கருத்துக்களைக் கூறும் உரிமை ஆகியவற்றைப் பாதுகாக்க அரசு இயந்திரம் இயக்கப்பட வேண்டும் என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம். இச்செயல்முறைக்கு எதிராக எங்களின் கடும் எதிர்ப்பையும் கவலையையும் இதன்மூலம் தெரிவிக்கிறோம்.மேலும், அரசியல் தலைவர்கள் என்ற வகையில், இந்த முழு செயல்முறையையும் வன்மையாகக் கண்டிக்கிறோம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



