சீனாவுக்குப் போட்டியாக இந்தியா செயற்படுவதை உடன் நிறுத்த வேண்டும்: வலியுறுத்தப்பட்டுள்ள விடயம்
இலங்கை விவகாரத்தில் சீனாவுக்குப் போட்டியாக இந்தியா செயற்படுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில ஆகியோர் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில், இலங்கைக்கு எந்த நாட்டவர்களும் வந்து போகலாம். இலங்கை அரசாங்கத்தின் அனுமதியுடன் எந்த நாட்டுக் கப்பலும் இங்கு வந்து தரித்து நிற்கலாம்.
இந்தியா மாத்திரம் இலங்கையின் தோழன் அல்ல
இலங்கைக்கு எந்த நாடும் உதவிகளை வழங்கலாம். இந்தியா மாத்திரம்தான் இலங்கையின் தோழன் அல்ல. இலங்கை மீது இந்தியாவுக்கு எவ்வளவு அக்கறை உண்டோ அதேயளவு அக்கறை சீனாவுக்கும் உண்டு.
ஏனெனில் சீனாவும் இலங்கைக்கு அவசர நிலைமைகளின் போது உதவி வழங்கும் பிரதான நாடாகும்.
இலங்கையைத் தனது நிகழ்ச்சி நிரலுக்குள் கொண்டுவந்து வடக்கு, கிழக்கை முழுமையாக அபகரிக்கவே இந்தியா விரும்புகின்றது. இதற்கு நாம் ஒருபோதும் அனுமதி வழங்கமாட்டோம் என குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |