முக்கிய பொறுப்பில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ: மறுவாழ்வு கொடுத்தாரா மகிந்த..!
பொதுஜன பெரமுண கட்சியில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு முக்கிய பொறுப்பொன்று வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, வரவிருக்கும் மாகாண சபைத்தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான முதன்மைக் குழுவின் தலைமைத்துவத்தை முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிடம் ஒப்படைக்க மொட்டுக்கட்சி தீர்மானித்துள்ளது.
கட்சியின் பொதுச்செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி சாகர காரியவசம் அது குறித்த அறிவித்தலை விடுத்துள்ளார்.
கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்
கட்சித் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ச தலைமையில் நேற்று(05.06.2026) நடைபெற்ற செயற்குழு கூட்டத்திலேயே இந்த விசேட தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இதன்படி, பத்தரமுல்ல, நெலும் மாவத்தையிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், கூட்டம் நடைபெற்ற பின்னர் ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சாகர காரியவசம், கட்சியின் உள்விவகாரங்கள் தொடர்பில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இதற்கமைய, எதிர்காலத்தில் மாகாண மற்றும் மாவட்ட மட்டத்தில் மேலும் பல உபகுழுக்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அவற்றுக்கான முதன்மைக் குழுவில் அரசியல் களம் மற்றும் அடிமட்ட மக்கள் குறித்து நல்ல புரிதலைக் கொண்ட முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட குழுவினர் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
ஒரு கட்சி என்ற ரீதியில் நாம் எந்த நேரத்திலும் மாகாண சபைத் தேர்தலை எதிர்கொள்ள முழுமையாகத் தயாராக இருக்கிறோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.