பிரித்தானிய மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!
பிரித்தானியாவில் குறைந்தபட்ட சம்பளத் தொகையை அதிகரிப்பதற்கு அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜோன்சன் (Boris Johnson) கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரசாங்கத்தின் இந்த திட்டத்தினால் பல மில்லியன் பிரித்தானிய மக்கள் பலன் அடைவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது. அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் தற்போது குறைந்தபட்ச ஊதியமாக மணிக்கு 8.91 பவுண்டுகள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த தொகையை 9.42 பவுண்டுகளாக அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவ்வாறு சம்பளத் தொகை அதிகரிக்கப்படுமாயின் மில்லியன் கணக்கான குறைந்தபட்ச ஊதியம் பெறும் பிரித்தானிய மக்கள் ஆண்டுக்கு 5.7 வீத ஊதிய உயர்வை பெற்றுக்கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, வாரத்திற்கு 35 மணி நேரம் வேலை பார்க்கும் ஒருவர் ஆண்டுக்கு 928 பவுண்டுகள் இனி கூடுதலாக பெறுவார். குறைந்தபட்ச ஊதியமாக மணிக்கு 10 பவுண்டுகள் என உறுதி செய்யப்படும் என்றே முன்னர் தகவல்கள் வெளியானது.
இந்த குறைந்தபட்ச ஊதிய உயர்வானது பெரும்பாலான பிரித்தானிய ஊழியர்களுக்கு பலனாக அமையும் என்று கூறப்பட்டுள்ளது. எனினும், அவர்களின் வயதை கருத்தில் கொண்டு இதில் மாறுபாடு இருக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
16 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே குறைந்தபட்ச ஊதிய உயர்வால் பலன் உள்ளது. ஆனால் பகுதி நேர வேலை செய்தாலும் அமுலுக்கு வரவிருக்கும் இந்த ஊதிய உயர்வு பொருந்தும்.
தற்போது 23 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே குறைந்தபட்ச ஊதியமாக மணிக்கு 8.91 பவுண்டுகள் அளிக்கப்படுகிறது, ஆனால் 21 அல்லது 22 வயதுடையவர்களுக்கு 8.36 பவுண்டுகள் அளிக்கப்பட்டு வருகிறது.
21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு 6.56 பவுண்டுகளும், 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு 4.62 பவுண்டுகளும் குறைந்தபட்ச ஊதியமாக தற்போது அளிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.