போர் பதற்றத்திற்கு மத்தியில் உக்ரைன் ஜனாதிபதியை சந்தித்தார் போரிஸ் ஜோன்சன் - ஆயுதங்கள் வழங்குவதாக உறுதி
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மற்றும் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு உக்ரைன் தலைநகர் கிவ்வில் இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பை தொடர்ந்து உக்ரைனுக்கு ஆதரவாக 120 கவச வாகனங்கள் மற்றும் கப்பல் எதிர்ப்பு ஏவுகணை அமைப்புகளை அனுப்ப பிரித்தானியா நடவடிக்கை எடுத்துள்ளதாக டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்தது.
உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் குழுவில் இடம்பெற்றிருந்து மூத்த அதிகாரிகள் ரஷ்யாவுடனான மோதலின் போது பிரித்தானியா வழங்கிய ஆதரவுக்கு பாராட்டுகளை தெரிவித்தனர். போரிஸ் ஜோன்சனின் கிவ் விஜயம் முன்கூட்டியே அறிவிக்கப்படவில்லை,
எனினும், லண்டனில் உள்ள உக்ரேனிய தூதரகத்தால் ட்விட்டரில் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியுடனான அவரது சந்திப்பின் புகைப்படம் வெளியிடப்பட்டது.
"உக்ரைன் மக்களுடன் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில், ஜனாதிபதி ஜெலென்ஸ்கியை நேரில் சந்திக்க பிரதமர் உக்ரைனுக்குச் சென்றுள்ளார்." என டவுனிங் ஸ்ட்ரீட் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பு தொடர்பில் போரிஸ் ஜோன்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உக்ரைன் முரண்பாடுகளை மீறி ரஷ்யப் படைகளை கிவ் இருந்து பின் வாங்க செய்தமை, 21 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய ஆயுத சாதனையை அடைந்துள்ளது.
"ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் உறுதியான தலைமைத்துவத்தாலும், உக்ரேனிய மக்களின் வெல்ல முடியாத வீரம் மற்றும் தைரியத்தாலும் தான் புடினின் கொடூரமான நோக்கங்கள் முறியடிக்கப்படுகின்றன.
"இந்த நடந்து வரும் சண்டையில் ஐக்கிய இராச்சியம் உக்ரைனுடன் இணைந்து நிற்கிறது என்பதை நான் இன்று தெளிவுபடுத்துகின்றேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.