ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் தொடர்பில் ஜனாதிபதி வழங்கியுள்ள உறுதி
ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் கொண்டுவரப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.
மகா சங்கத்தினருடன் நேற்றைய தினம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பில் வைத்தே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டின் எதிர்காலத்துக்காக மேற்கொள்ளப்படும் கொள்கை சார்ந்த தீர்மானங்களுக்கு சிலர் எதிர்ப்புத் தெரிவித்து வருவது, எதிர்காலத் தலைமுறைக்குச் செய்யப்படும் பாரிய அநீதியாகும் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகமானது, 40 வருட காலமாக நாட்டுக்குத் தேவையான பெரும் எண்ணிக்கையான கல்விமான்களை உருவாக்கியுள்ளது.
உயர்தரப் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளுடன் சித்தியடைகின்ற மாணவர்கள் கூட, கொத்தலாவல பல்கலைக்கழகத்தை தங்களது உயர்க் கல்விக்காகத் தெரிவு செய்வதற்கு அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
உயர் கல்விக்காக தமது பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்புவதன் மூலம், நாடும் பெற்றோர்களும் இழக்கும் பாரிய தொகையைச் சேமிக்க வேண்டுமானால், உயர்ந்த தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்கள் நாட்டில் உருவாக்கப்பட வேண்டியது அவசியமாகும்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுச் சட்டத்தில் உள்ள தடைகளை அகற்றி, கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தை அதன் கீழ் கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.  
 
    
     
    
     
    
     
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
 
 
 
        
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        