ஏழு மாதங்களுக்கு பின் சீன ஜனாதிபதியுடன் பேசிய ஜோ பைடன்!
கடந்த 7 மாதங்களுக்கு பின்னர், முதல்முறையாக சீன அதிபர் ஜின்பிங்குடன் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தொலைபேசி வழியாக கலந்துரையாடியுள்ளார்.
உலகின் இருபெரும் வல்லரசு நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையில் இரு தரப்பு உறவு மோசமாக இருந்து வருகிறது. வர்த்தகமும், கொரோனா பரவல் விவகாரமும் இரு தரப்பு உறவு மோசமானதற்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன.
இந்தநிலையில் நேற்று முன்தினம் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், சீன அதிபர் ஜின் பிங்கை முதல்முறையாக தொலைபேசியில் அழைத்துப் பேசினார். அவர் அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கு வந்த பின்னர் ஜின்பிங்குடன் நடத்திய 2வது தொலைபேசி பேச்சுவார்த்தை இதுவாகும்.
இந்த பேச்சுவார்த்தை 90 நிமிடங்கள் நீடித்ததாக தகவல்கள் கூறுகின்றன. இந்த தொலைபேசி வழி பேச்சுவார்த்தையின்போது, எதிர்காலத்தில், எந்தவொரு சூழ்நிலையிலும், மோதலில் ஈடுபடும் எண்ணம் இல்லை என்று ஜின்பிங்கிடம் ஜோ பைடன் தெளிவுபடுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம் இரு தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தை குறித்து சீன அரசாங்கத்தின் தொலைகாட்சி தகவல் வெளியிட்டுள்ளது. அதில் இந்த பேச்சுவார்த்தை நேர்மையானது, ஆழமானது.
சீனாவுடனான அமெரிக்காவின் சமீபத்திய கொள்கையால் வர்த்தகம், தொழில்நுட்பம், மனித உரிமைகள், கொரோனா வைரஸ் தோற்றம் போன்ற விவகாரங்களில் ஏற்பட்ட கடுமையான சிரமங்களை ஜோ பைடனிடம் ஜின்பிங் சுட்டிக்காட்டினார் என்று அந்த தொலைகாட்சி தெரிவித்துள்ளது.