சவால்களை வெற்றிகொண்ட சுபீட்சமான நாளைய தினத்துக்கான சௌபாக்கிய தேசியம் : ஜீவன் தொண்டமான் திடசங்கற்பம்
இலங்கை 74வது சுதந்திர தினத்தை கொண்டாடும் இத் தருணத்தில் நாட்டில் மாற்றங்களையும்,முன்னேற்றங்களையும் தரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஒவ்வொருவருக்குள்ளும் உண்டு.
இலங்கையில் எழுபத்திமூன்று சுதந்திர தினக் கொண்டாட்டங்களைக் கண்டிருந்த இ.தொ.கா. 74வது சுதந்திர தினத்தில் மலையக சமூகத்தின் மேம்பாட்டிற்காக தம்மை அர்ப்பணித்திருக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இடைவிடாது தம்பணியைத் தொடரும் என்பதை இந்த சுதந்திர தினத்தில் உறுதி கொள்வதாக தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சரும் இ.தொ.கா. பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான் தனது சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியிட்ட வாழ்த்து செய்தியிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். சுதந்திர இலங்கையில் பல்லின மக்கள் வாழ்ந்து வருகின்ற இந்த நாட்டில் ஒரு நிரந்தர சமாதானத்தை இலங்கைத் தாய் தந்தருள எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
மலையகத்திலும் இந்த நாட்டின் இதர பகுதிகளிலும் வசித்து வரும் இந்திய வம்சாவளி மக்கள் அவர்களது உரிமைகள் சலுகைகள் எல்லாவற்றிலும் விடுதலை பெற்ற மக்களாக இருக்க வேண்டுமென்பது எமது வாஞ்சை.
இந்த 74வது சுதந்திர தினம் தேசிய சுதந்திர தினமாக இம்முறை “சவால்களை வெற்றிகொண்ட சுபீட்சமான நாளைய தினத்துக்கான சௌபாக்கிய தேசியம்” என்னும் தொனிப்பொருளுக்கமைவாக எமது கட்டுக்கோப்பை மேலும் பலப்படுத்தி இதன் வாயிலாக எமக்குரிய உரிமைகள் சலுகைகள் ஆகியவற்றைப் பெற்றுக் கொள்வதற்கு இந்த 74வது சுதந்திர தினத்தில் நாம் திடசங்கற்பம் எடுத்துக் கொள்வோம்.
இத்தினத்தில் பெருந்தோட்ட மக்களுக்கு பல்வேறு வரப்பிரசாதங்கள் கிட்டும் என்ற
திடமான நம்பிக்கையோடு நாம் எதிர்பார்த்து நிற்கின்றோம். அனைத்து இலங்கை வாழ்
மக்களுக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.