ஜீவநகர் கிராம மக்கள் நிரந்தர வீட்டுக்கான கொடுப்பனவுகளை விரைவாக வழங்குமாறு கோரிக்கை
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முத்துஐயன்கட்டு ஜீவநகர் மாதிரி கிராம மக்கள் தமது நிரந்தர வீட்டுக்கான கொடுப்பனவுகளை விரைவாக வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முத்துஐயன்கட்டு கிராமத்தின் ஜீவநகர் மாதிரி கிராமத்தில் வீட்டுத்திட்டம் கடந்த 2019 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தின் உடைய காலகட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டு இருந்தது.
குறிப்பாக குறித்த வீட்டுத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னணியில் குறித்த மக்கள் தற்காலிக வீடுகளை அமைத்துக் கொண்டு நிரந்தர வீட்டை அமைப்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்த போது இடம்பெற்ற ஆட்சி மாற்றத்துடன், அவர்களுக்கான கொடுப்பனவுகள் கிடைக்காமை காரணமாக வீட்டுத் திட்டப்பணிகள் இடைநடுவில் கைவிடப்பட்டது.
இவ்வாறான நிலையில் குறித்த குடும்பங்கள் தற்காலிக கொட்டகைகளில் வசித்து வந்ததோடு, அவர்களுக்கான மலசலகூட வசதிகள், மின்சார வசதிகள், குடிநீர் வசதிகள் எதுவுமற்ற நிலையில் வாழ்ந்து வந்தனர்.
இந்த நிலையில் இந்த விடயம் தொடர்பில் கடந்த வருடம் ஊடகங்களினால் குறித்த மக்களின் அவலநிலை சுட்டிக்காட்டப்பட்டு இருந்தது.
இதன் பின்னணியில் குறித்த இடத்திற்குச் சென்று இருந்த மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையிலான அதிகாரிகள் அரசியல் தலைவர்களது முயற்சிகள் காரணமாகக் குறித்த கிராமத்தில் அனைத்து குடும்பங்களுக்கும் மலசலகூட வசதிகள் அமைத்துக் கொடுக்கப்பட்டதுடன், பொதுக் கிணறுகள் நான்கும் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
அத்தோடு தற்போது குறித்த பகுதிக்கு மின்சார இணைப்புகள் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற நிலையில், குறித்த செயற்பாடுகளை முன்னெடுத்த அரச அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்களுக்குப் பொதுமக்கள் தங்களுடைய நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.
தொடர்ச்சியாக தாங்கள் தற்காலிக கொட்டகைகளில் வாழ்ந்து வருகின்ற நிலையில், எதிர் வருகின்ற மாரிகாலத்தில் தாம் வாழ முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளதாகவும், எனவே தங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் வீடுகளின் மிகுதி நிதியை வழங்கி தங்களுடைய வீட்டுத்திட்டத்தினை பூர்த்தியாக்குவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மிக விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போது தாங்கள் இருக்கின்ற தற்காலிக வீடுகள் ஒரு மழைக்குக் கூட தாங்காத நிலைமை இருக்கின்ற நிலையில் மிக விரைவாக நிரந்தர வீடுகளை புனரமைப்பு செய்வதற்கான மீதி கொடுப்பனவுகளைத் தந்து தங்களுடைய நிம்மதியான வாழ்வுக்கு வழி சமைக்க வேண்டும் எனக் குறித்த கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.










இது என்ன ஸ்கூலா.. எழுந்து நிற்காதது ஒரு பிரச்சனையா? விஜய் சேதுபதியை திட்டும் நெட்டிசன்கள்! Cineulagam

போலியான திருமணம்... நாடுகடத்தப்பட்ட புலம்பெயர் நபர் பிரித்தானியாவில் குடும்ப விசாவிற்கு விண்ணப்பம் News Lankasri
