மலையகத்தின் அரசியல் ஆளுமையை விட்டுக்கொடுத்துவிட்டோம்! ஜீவன் தொண்டமான்
நாட்டுக்கு ஒரு நல்ல தலைவர் கிடைத்துள்ளார் என நம்பி, மலையகத்தின் அரசியல் ஆளுமையை விட்டுக்கொடுத்துவிட்டதாக முன்னாள் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், அரசாங்கத்தில் 160 உறுப்பினர்கள் இருந்தபோதிலும், அவர்களில் எத்தனை பேர் தங்களது தொகுதிகளுக்குச் சென்று மக்களின் உண்மையான பிரச்சினைகளைப் பேசுகின்றனர் எனக் கேள்வி எழுப்பினார்.
மக்களின் பிரச்சினை
இது அரசாங்கத்தின் மீதான வெறும் விமர்சனம் அல்ல என்றும், தற்போதைய யதார்த்த நிலைமை என்றும் குறிப்பிட்ட அவர், அறிக்கைகளை வெளியிடுவதற்குப் பதிலாக, மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பாக ஆரம்பம் முதலே சம்பள அதிகரிப்பை வர்த்தமானியில் வெளியிட வேண்டும் எனத் தாம் வலியுறுத்தி வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

எனினும், அவ்வாறு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படாமல், பெருந்தோட்ட நிறுவனங்களுடன் மறைமுகமாகப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டதாக அவர் குற்றஞ்சாட்டினார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள அதிகரிப்பை வழங்குவதற்குப் பதிலாக, குத்தகைக் காலத்தை நீடிப்பது தொடர்பில் பெருந்தோட்ட நிறுவனங்களுடன் அரசாங்கம் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகள்
இது தொடர்பில் ஜனாதிபதியும் வாக்குறுதி வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். சம்பள அதிகரிப்பு முழுமையாகத் தொழிலாளர்களைச் சென்றடைவதை உறுதிப்படுத்துவதற்காகவே வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட வேண்டும் எனத் தாம் கோரியதாகவும் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
இதற்கு உதாரணமாக, வெவர்லி தோட்டத்தில் ஏற்பட்ட சம்பளப் பிரச்சினையைச் சுட்டிக்காட்டிய அவர், அங்கு 1,350 ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். தனியார் பெருந்தோட்டங்களிலும் இதே தொகை சம்பளமாக வழங்கப்படுவதாகக் குறிப்பிட்ட அவர்,

இவ்வாறான சூழ்நிலையில் சம்பள அதிகரிப்பை வர்த்தமானியில் வெளியிடுவதற்கு அரசாங்கம் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கேள்வி எழுப்பினார். மேலும், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகள் மற்றும் தொழிற்சங்கப் போராட்டங்களுக்கு முகங்கொடுத்து வந்துள்ள நிலையில், மலையக இளைஞர், யுவதிகளின் வரலாறு மறைக்கப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கவலை தெரிவித்தார்.
எனவே, மலையக மக்களின் உரிமைகள், தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை மற்றும் சமூகத்தின் வரலாறு ஆகியவற்றைப் பாதுகாக்க அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜீவன் தொண்டமான் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார்.