அமைச்சர் ஜீவன் தொண்டமான் எனது சாதனையை முறியடித்துவிட்டார்! ஜனாதிபதி ரணில்(Video)
தனது சாதனையை இளம் அமைச்சர் ஜீவன் தொண்டமான் முறியடித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இளம் அமைச்சராக தான் சில பணிகளை நிறைவுசெய்ததாகவும், இந்தச் சாதனையை தற்போது தன்னைவிட இளம் வயதில் அமைச்சர் ஜீவன் தொண்டமான் முறியடித்து, இளம் அமைச்சருக்கான சாதனையை தன்வசப்படுத்தியுள்ளார் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜீவன் தொண்டமானின் சாதனை
கேகாலை, அரநாயக்க நீர் விநியோகத் திட்டம் ஜனாதிபதியினால் மக்களிடம் கையளிக்கப்பட்ட நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, "2018 இல், பிரதமராக இருந்தபோது, இந்த குடிநீர் திட்டத்திற்கு அடிக்கல் நாட வந்தேன். இன்று ஜனாதிபதி என்ற ரீதியில் அந்த நீர் திட்டத்தை திறந்துவைக்க வருவதை பெரும் பாக்கியமாக கருதுகின்றேன்.
இந்த திட்டத்தை நிறைவு செய்ய முடிந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். கபீர் ஹசீம் அமைச்சரினால் ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டம் அடுத்த அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டது.
அமைச்சர் ஜீவன் தொண்டமானின் பதவிக் காலத்தில் நிறைவு செய்யப்பட்டுள்ளது.
நான் செய்த ஒரு சாதனையை அமைச்சர் ஜீவன் தொண்டமான் முறியடித்துள்ளார். இந்த நாட்டிலேயே இளம் அமைச்சர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
அதற்கு முன்னர் நான்தான் அந்த சாதனைக்கு உரிமையாளனாக இருந்தேன். தற்போது அந்த சாதனையை ஜீவன் தொண்டமான் செய்துள்ளார். இளம் தலைமுறையினர் இவ்வாறு முன்வர வேண்டும்." என்று குறிப்பிட்டார்.
கேகாலை-அரநாயக்க நீர் விநியோகத் திட்டம்
மேலும் இந்த திட்டம் கேகாலை மாவட்டத்தின் அரநாயக்க, மாவனல்ல, ரம்புக்கன பிரதேச செயலகங்களுக்குரிய 135 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் நிலவிய குடிநீர் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் 3,847 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு, நெதர்லாந்து அரசாங்கத்தின் 18,650 மில்லியன் ரூபா கடனுதவியின் கீழ், இந்த நீர் விநியோகத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
இதன் நிர்மாணப் பணிகள் 2018 இல் ஆரம்பிக்கப்பட்டது. நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலின் கீழ் தேசிய நீர் வழங்கல், வடிகாலமைப்பு சபையின் மேற்பார்வையின் கீழ் இதன் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
ஜீவனின் கருத்து
நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து ஜனாதிபதியே மீட்டெடுத்தார். எனவே, அவர் தலைமையின் கீழ் இந்நாடு முன்னேறும் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது. எனவே, ஜனாதிபதியின் வேலைத்திட்டங்களுக்கு கட்சி பேதமின்றி அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்." என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
ஹெம்மாத்தகம நீர்வழங்கல் திட்டம் நேற்று அசுபினி எல்ல நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பொதுமக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்ட போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது," இத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு ஒத்துழைப்பு நல்கிய நெதர்லாந்து, துருக்கி ஆகிய நாடுகளின் அரசாங்கங்களுக்கு நன்றிகூற கடமைபட்டுள்ளோம்.
அதேபோன்று குறித்த வேலைத்திட்டத்தில் பங்கேற்ற நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினர் மற்றும் ஒப்பந்தக்காரர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.
ஐ.நாவின் நிலைபேண்தகு அபிவிருத்தி இலக்குகளில் 6ஆம் பிரிவில், அனைவருக்கும் சுத்தமான குடிநீர் வழங்கப்பட வேண்டும் என்ற இலக்கை அடைவதற்கு நாம் தீவிரமாக செயற்படுவோம்.
நன்றி தெரிவிப்பு
இவ்வேலைத்திட்டத்தை முதலில் ஆரம்பித்து வைத்த நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசீம், எதிரணியில் இருந்தாலும் இந்நிகழ்வில் பங்கேற்றமை மகிழ்ச்சியளிக்கின்றது.
நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலைக்கு மத்தியிலும் இப்படியான வேலைத்திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கான சூழ்நிலையை எமது ஜனாதிபதியே ஏற்படுத்திக்கொடுத்துள்ளார் என்பதையும் நினைவுகூற வேண்டும்.
நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து ஜனாதிபதியே மீட்டெடுத்தார். கைவிடப்பட்டிருந்த அபிவிருத்தி திட்டங்களை மீள ஆரம்பிப்பதற்கு ஏதுவான நிலைக்கு அவர் நாட்டை கொண்டு வந்துள்ளார். எமது நாட்டை அவர் சிறந்த நிலைக்கு கொண்டுவருவார் என்ற நம்பிக்கை உள்ளது."என கூறியுள்ளார்.
மேலதிக செய்தி-திருமாள்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |