ஜீவன் தொண்டமான் மாணவர்களுக்கு வழங்கியுள்ள அறிவுரை
மாணவர்கள் தமக்கான தொழில் பாதையை நிர்ணயித்துக்கொள்வதற்கு தொழில் கல்வி என்பது மிக முக்கியம் என நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
ஹட்டனில் உள்ள தொண்டமான் தொழில் பயிற்சிக் கல்லூரியில், இன்றையதினம் (20.02.2024) முன்னெடுக்கப்பட்ட தொழிற்பயிற்சிகளுக்கு மாணவர்களை உள்ளீர்க்கும் பிரதான நிகழ்வில் நிகழ்நிலை ஊடாக கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
இன்றைய நவீன உலகை வெல்வதற்கு கல்வியும், தொழில்நுட்ப கல்வியும் எவ்வளவு முக்கியமோ அதேபோல பொருளாதார சவால்களை எதிர்கொள்வதற்கும், தமக்கான தொழில் பாதையை நிர்ணயித்துக்கொள்வதற்கும் தொழில் கல்வி மிக முக்கியமாகும்.
உயரிய நோக்கம்
மலையக இளைஞர்களை தொழில்ரீதியாக பலப்படுத்தவும், அதன்மூலம் வாழ்க்கையில் அவர்கள் அடுத்தக்கட்டம் நோக்கி பயணித்து உயர்ந்த நிலைக்கு வர வேண்டும் என்ற உயரிய நோக்கிலுமே இந்நிலையம் ஆரம்பிக்கப்பட்டது.
அன்று முதல் இன்று வரை சிறந்த முறையில் தொழில் பயிற்சிகளை வழங்கி வருகின்றது. இங்கு பயின்ற பலர் சமூகத்தில் இன்று சிறந்த நிலையில் இருந்து, எமது சமூகத்துக்கும் பங்களிப்பு வழங்குவதை காணமுடிகின்றது.
வாழ்த்து
இதையே நாம் உங்களிடம் இருந்து எதிர்பார்க்கின்றோம். புத்தக கல்வியை போன்றே அனுபவக் கல்வியும், பயிற்சிக் கல்வியும் முக்கியம். எனவு கிடைத்துள்ள இந்த வாய்ப்பை முறையாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
உங்கள் அனைவரினதும் கல்வி நடவடிக்கையும், எதிர்காலமும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்” எனவும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |