ரணில் அரியணையேறும் போது வெற்றியின் பங்காளியாக இ.தொ.கா: ஜீவன் தொண்டமான் உறுதி
செப்டெம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீண்டும் சிம்மாசனம் ஏறும்போது அந்த வெற்றியின் பங்காளியாக இதொகாவும் கம்பீரமாக நிற்கும் என்று இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும், சுயேட்சை வேட்பாளரான ரணில்
விக்ரமசிங்கவை ஆதரித்து,
நுவரெலியா மாநகரில் 15.09.2024 அன்று மதியம் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்க, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் அதன் தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான், பொதுச் செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான், தவிசாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ராமேஷ்வரன், சப்ரகமுவ ஆளுநர் நவீன் திசாநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.பீ.திசாநயக்க, நிமல் பியதிஸ்ஸ, மனுஷ நாணயக்கார, முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட பலரும் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீண்டும் சிம்மாசனம்
இதில் உரையாற்றும் போதே ஜீவன் தொண்டமான் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியவை வருமாறு,
ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீண்டும் சிம்மாசனம் ஏறும்போது அந்த வெற்றியின் பங்காளியாக இதொகாவும் கம்பீரமாக நிற்கும். அதுமட்டுமல்ல மலையக மறுமலர்ச்சி திட்டத்தை அவரின் ஆட்சியின்கீழ் வெற்றிகரமாக நிறைவு செய்வோம்.
“ஆயிரம் ரூபாவை வாங்கித்தருவோம் என உறுதியளித்தோம். அதனை செய்து காட்டினோம். தற்போது அடிப்படை நாள் சம்பளமாக ஆயிரத்து 350 ரூபாவை பெற்றுக்கொடுத்துள்ளோம்.
காங்கிரஸை பொறுத்தமட்டில் சொன்னதை நிச்சயம் செய்து காட்டும் கட்சியாகும் என்பதை போலித்தனமாக விமர்சிப்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். அடிப்படை சம்பளத்தை அதிகரித்து கொடுத்த எமக்கு எஞ்சிய 350 ரூபாவை பெற்றுக்கொடுப்பது எவ்வித பிரச்சினையும் கிடையாது.
சம்பளப்பிரச்சினை
செப்டெம்பர் 21 ஆம் திகதிக்கு பிறகும் ரணில் விக்ரமசிங்க தான் ஜனாதிபதியாக இருப்பார் என்பதை கூறிவைக்க விரும்புகின்றோம். மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமான் என் கண் முன்னே இறந்தார். கடைசியாகவும் அவர் சம்பளப் பிரச்சினை பற்றிதான் என்னுடன் பேசினார். அவர் இறந்தாலும் மக்களை என்னிடம் தந்துவிட்டு போயுள்ளார்.
யார் என் பக்கம் நிற்காவிட்டாலும் மக்கள் நிற்பார்கள் என்ற உறுதியான நம்பிக்கை உள்ளது. எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மீது எனக்கு மரியாதை உள்ளது. ஆனால் அவருக்கு தலைமைத்துவம் கிடையாது. மலையக மக்கள் தொடர்பில் புரிதலும் இல்லை. ஏனெனில் அவருடன் இருப்பவர்கள் அப்படிபட்டவர்கள். 50 ரூபாவையே பெற்றுக்கொடுக்க முடியாதவர்கள் 2,500 ரூபாவை பெற்றுக்கொடுப்பார்களாம்.
பிரதேச சபை உருவாக்கம், பிரதேச செயலகம் அதிகரிப்பு உள்ளிட்ட விடயங்களை தற்போதைய ஜனாதிபதி பிரதமராக இருக்கும்போதே செய்தார்.
எமது மக்களின் பிரஜைவுரிமை பிரச்சினைக்கும் அவரே முற்றுபுள்ளிவைத்தார். எனவே, அவரை நாம் நிச்சயம் ஆதரிக்க வேண்டும். நாடு நன்றாக இருக்கவேண்டுமெனில் ரணிலுக்கு புள்ளடி இடுங்கள்.
மற்றவர்களை தேர்வு செய்தால் நாசம்தான் ஏற்படும். ரணில் விக்கிரமசிங்க ஆட்சிகாலத்தில்தான் மலையகத்துக்கு உரிமைசார் விடயங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க செப்டெம்பர் 21 ஆம் திகதி வெற்றிபெற்று மீண்டும் அரியணையேறும்போது அந்த வெற்றியின் பங்காளியாக நாமும் கெத்தாக நிற்கவேண்டும். ஜனாதிபதியின் வெற்றியின் பங்காளி மலையக மக்கள் என்ற வரலாறு பதிவாக வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |