ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் யாழ்.பொறியியல் மாணவன் விபரீத முடிவு
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் மூன்றாம் வருட மாணவன் ஒருவர் விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இன்று(16.06.2023) மீட்கப்பட்டார் என்று மஹரகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம், ஊர்காவற்துறை - நாரந்தனை வடக்கு பகுதியைச் சேர்ந்த விக்னேஸ்வரன் அபிநஜன் (வயது 23) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சடலமாக மீட்பு
பொரலஸ்கமுவ - கட்டுவல பிரதேசத்தில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தால் வாடகை அடிப்படையில் எடுக்கப்பட்ட மாணவர் விடுதியின் தரைத்தளத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் குறித்த மாணவன் சடலமாக மீட்கப்பட்டார்.
விடுதியின் மேல் தளத்தில் உறங்கிக் கொண்டிருந்த மாணவன் ஒருவர் இன்று அதிகாலை 4:30 மணியளவில் எழுந்து கீழே வந்து கொண்டிருந்த போது குறித்த மாணவன் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதைக் கண்டு அச்சமடைந்து ஏனையோருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
இதையடுத்து மற்ற மாணவர்களும் வந்து மாணவன் உயிருடன் இருப்பதாக நினைத்து கயிற்றை அறுத்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். எனினும், மாணவனின் உயிர் பிரிந்து இருந்தது.
தீவிர விசாரணை
பின்னர் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து அதிகாரிகள் வந்து விசாரணைகளை ஆரம்பித்தனர்.
மஹரகம மரண விசாரணை அதிகாரி எச்.எம்.டக்ளஸ் ரூபசிறி வந்து சம்பவ இடத்தில் விசாரணை நடத்தியுள்ளார்.
நுகேகொட குற்றத் தடுப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணைகளை ஆரம்பித்ததுடன், நீதிவான் விசாரணையும் நடத்தப்பட்டது.
சடலம் மீதான பிரேத பரிசோதனை களுபோவில போதனா வைத்தியசாலையில் நடைபெறவுள்ளது.
மரணத்துக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்பதுடன், மஹரகம பொலிஸ் நிலையப் பிரதான பொலிஸ் பரிசோதகர் சேலக ராஜபக்சவின் பணிப்புரையின் பேரில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |