இந்தோனேசியாவுக்கான புதிய தூதுவராக ஜயநாத் கொலம்பகே நியமனம்
ஐந்து அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும் மற்றும் தூதுவர் ஒருவருக்கும் நாடாளுமன்ற உயர் பதவிகளுக்கான குழுவின் அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது.
இதன்படி, இந்தோனேசியாவுக்கான இலங்கையின் புதிய தூதுவராக அட்மிரல் ஜயநாத் கொலம்பகே நியமிக்கப்பட்டுள்ளார்.
அவரது பெயரை உயர் பதவிகளுக்கான நாடாளுமன்றக் குழு அங்கீகரித்துள்ளதாக நாடாளுமன்றத்தின் தகவல் தொடர்புத் துறை தெரிவித்துள்ளது.
ஏற்கனவே ஜயநாத் கொலம்பகே, ஜப்பானுக்கான தூதுவராக நியமிக்கப்படவிருந்தார்.
முன்னர் ரத்து செய்யப்பட்ட கொலம்பகேயின் நியமனம்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, இந்த நியமனத்தை பரிந்துரைத்திருந்தார். எனினும் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதும், இந்த நியமனத்தை ரத்துச்செய்து, அதற்கு பதிலாக ராஜதந்திரியான ரொட்னி பெரேராவை நியமிப்பதற்கான முடிவை மேற்கொண்டுள்ளார்.
முன்னதாக கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கம், அமைக்கப்பட்ட பின்னர், ஜப்பானின் இலகு புகையிரத திட்டத்தை ரத்துச்செய்தமையை அடுத்து, ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு பாதிப்படைந்துள்ளது.
இந்தநிலையில், ஜப்பானுடனான உறவை பலப்படுத்த, படையதிகாரி ஒருவரை தூதுவர் நிலைக்கு நியமிப்பதை விடுத்து ராஜதந்திரி ஒருவரை நியமிப்பதே சிறந்தது என்று ரணில் எண்ணம் கொண்டிருப்பதன் காரணமாகவே கொலம்பகேயின் நியமனம் ரத்துச்செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் விவசாய, வனவிலங்கு, வனஜீவராசிகள், தேசிய கொள்கைகள், சுகாதாரம், தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஆகிய அமைச்சுகளுக்காக நியமிக்கப்பட்ட செலாளர்களுக்கான அனுமதியை நாடாளுமன்ற உயர் பதவிகளுக்கான குழு வழங்கியுள்ளது.
எனினும் இந்த ஐந்து பேரில் எவரும் தமிழர்கள் இல்லையென்பது குறிப்பிடத்தக்கது.
மேலதிக செய்தி: சிவா மயூரி
அமெரிக்க வெளிவிவகார கொள்கையில் ஈழத் தமிழர்கள் தொடர்பில் முக்கிய மாற்றம்: சுரேன் சுரேந்திரன்(Video) |