ICC தலைவர் பதவியில் மீண்டும் ஜெய் ஷா
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) தலைவராக ஜெய் ஷா போட்டியின்றி இரண்டாவது முறையாக ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சரும் பாஜகவின் மூத்த தலைவருமான அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா, கடந்த 2024 டிசம்பரில் ஐசிசி தலைவராகப் பொறுப்பேற்றார். இவரது மூன்று ஆண்டு பதவிக்காலம் அடுத்தாண்டு டிசம்பருடன் நிறைவடையவுள்ளது.
இரண்டாவது முறை
இந்த நிலையில், இந்தோனேஷியாவில் உள்ள பாலி நகரில் ஐசிசி இயக்குநர்கள் மற்றும் வாரியக் குழு உறுப்பினர்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பங்கேற்ற ஐசிசி நிர்வாகிகள், ஜெய் ஷாவை மீண்டும் இரண்டாவது முறையாக தலைவராக நியமிக்க ஒருமனதாக தேர்வு செய்துள்ளனர்.
ஏற்கெனவே தனது இரண்டாவது ஆண்டில் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவராகப் பதவியில் இருக்கும் ஜெய் ஷா, இதன் மூலம் டிசம்பர் 2030 ஆம் ஆண்டு வரை இப்பதவியில் தொடர்வார்.

சர்வதேச கிரிக்கெட் பேரவை யாப்பின்படி, சர்வதேச கிரிக்கெட் பேரவை தலைவர் ஒருவர் தலா மூன்று ஆண்டுகள் கொண்ட அதிகபட்சம் இரண்டு பதவிக்காலங்கள் மட்டுமே பதவி வகிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நியமனம் குறித்து சர்வதேச கிரிக்கெட் பேரவை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், ஜெய் ஷாவின் தலைமையின் மீது பேரவை கொண்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை இந்த முடிவு பிரதிபலிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெய் ஷா வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,
பெரும் பாக்கியம்
“ஐசிசி என் மீது கொண்டுள்ள நம்பிக்கையைக் கண்டு நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். ஒவ்வொரு இயக்குநரும் என் மீது தொடர்ந்து வைத்திருக்கும் நம்பிக்கைக்கும் ஆதரவுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஐசிசி தலைவராகப் பணியாற்றுவது எனக்குக் கிடைத்த ஒரு பெரும் பாக்கியம் மற்றும் பொறுப்பாகும். உலகம் முழுவதும் கிரிக்கெட்டின் நலன்களை மேம்படுத்த, நமது உறுப்பினர்களுடன் இணைந்து பணியாற்ற நான் உறுதியுடன் இருக்கிறேன்.

நமது விளையாட்டின் வரலாற்றில் மிக முக்கியமான மற்றும் உற்சாகமான காலகட்டங்களில் நாம் நுழைந்து கொண்டிருக்கிறோம்.
2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் மீண்டும் இடம்பெறுவது, நமது விளையாட்டைப் புதிய பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தவும், புதிய தலைமுறை வீரர்கள் மற்றும் ரசிகர்களை ஊக்குவிக்கவும் ஒரு அற்புதமான வாய்ப்பை வழங்குகிறது.
மக்களை ஒன்றிணைக்கும் ஆற்றலே கிரிக்கெட்டின் மிகப்பெரிய பலம் என்று நான் எப்போதும் நம்புகிறேன்.
வாரியம் மற்றும் நமது உறுப்பினர்களின் ஆதரவுடன், நமது லட்சியங்களைச் செயலாக மாற்றுவதிலும், நாம் அடையும் முன்னேற்றம் வருங்கால சந்ததியினருக்கு ஒரு நீடித்த பாரம்பரியமாக நிலைத்திருப்பதை உறுதி செய்வதிலும் எங்கள் கவனம் இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
you may like this..