சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத் தலைவராக, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் செயலாளர் ஜெய் ஷா தெரிவு
சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்(ஐசிசி) தலைவராக, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் செயலாளர் ஜெய் ஷா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு எதிராக யாரும் விண்ணப்பிக்காத நிலையில், அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
35 வயதாகும் ஜெய் ஷா, சர்வதேச கிரிக்கெட் சம்மேளன தலைவராக தேர்வு செய்யப்பட்டதன் மூலம் மிக இளம் வயதிலேயே சம்மேளன தலைவராகி சாதனை படைத்திருக்கிறார்.
சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம்
அத்துடன், சர்வதேச கிரிக்கெட் சம்மேளன தலைவர் பதவியில் அமரும் ஐந்தாவது இந்தியர் என்ற பெருமையையும் அவர், இதன்மூலம் பெற்றுள்ளார்.
இதற்கு முன் இந்தியாவை சேர்ந்த ஜக்மோகன் டால்மியா, சரத் பவார், என் ஸ்ரீனிவாசன் மற்றும் ஷஷான்க் மனோகர் ஆகியோர் சர்வதேச சம்மேளனத் தலைவராக இருந்துள்ளனர்.
கடந்த 15 ஆண்டுகளாக இந்திய மாநில அளவிலும், தேசிய அளவிலும் கிரிக்கெட் அமைப்புகளில் பொறுப்பு வகித்து வந்த ஜெய் ஷா, தற்போது கிரிக்கெட்டின் உயரிய அமைப்பான சர்வதேச கிரிக்கெட்டின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னர், 2009 முதல் 2013 வரை அஹமதாபாத் மத்திய கிரிக்கெட் அமைப்பின் உறுப்பினராக அவர் இருந்தார். 2013இல் குஜராத் மாநில கிரிக்கெட் அமைப்பின் இணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவரது காலத்தில் ஐ.பி.எல் தொடர் பல உச்சங்களை அடைந்தது. உலகிலேயே இரண்டாவது அதிக பணம் ஈட்டும் விளையாட்டுத் தொடராக ஐ.பி.எல் மாறியது.
மேலும், இந்திய அணி 2024 இல், 20க்கு 20 உலகக் கிண்ணத்தை வென்றுள்ளது.