ஜப்பானிய இலகு தொடருந்து திட்டத்தை தொடங்குவதில் சிக்கல்
ஜப்பான் (Japan) நிதியுதவியுடன் கூடிய இலகு தொடருந்து திட்டம் மீண்டும் ஆரம்பிப்பதில் நிச்சயமற்ற நிலை ஏற்பட்டுள்ளது
முன்னதாக கடன் மறுசீரமைப்பை முடித்த பின்னர் உதவி திட்டங்களை முன்னெடுக்க ஜப்பான் அரசாங்கம் விருப்பம் வெளியிட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், நாட்டின் கடன் மறுசீரமைப்பு செயல்முறை முடிவடைந்த பின்னரும், ஜப்பான் அதைப் பற்றி விவாதிக்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளதாக ஜப்பானிய அரசாங்கத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஜப்பானின் முடிவு
ஏற்கனவே கொழும்பு (Colombo) நகரத்தின் நெரிசலைக் குறைக்கும் நோக்கத்தில், ஜப்பான் சர்வதேச கூட்டுறவு அமைப்பில் இருந்து 1.4 பில்லியன் டொலர்கள் கடன் மூலம் இந்த திட்டத்துக்கு நிதியளிக்கப்பட்டது.
எனினும், ஜப்பானிய நிதியுதவியில் கொழும்பிற்கான இலகு தொடருந்து திட்டத்தை கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம் அதிக செலவைக் காரணம் காட்டி இரத்து செய்தது.
கொழும்பு நகரத்தின் நெரிசலைக் குறைக்கும் நோக்கத்தில், ஜப்பான் சர்வதேச கூட்டுறவு அமைப்பில் இருந்து 1.4 பில்லியன் டொலர்கள் கடன் மூலம் இந்த திட்டத்துக்கு நிதியளிக்கப்பட்டது.
இந்தநிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம், இந்த திட்டத்தின் பணிகளை மீள ஆரம்பிக்க தீர்மானித்ததுடன், அதனை மீண்டும் நடைமுறைப்படுத்த ஜப்பானிய அரசாங்கத்தை சமாதானப்படுத்த முயற்சித்தது.
இதற்கிடையில், தேர்ந்தெடுக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் குழுவைச் சந்தித்த ஜப்பானிய வெளிவிவகார அமைச்சின் பிரதி ஊடகச் செயலாளர் கனேகோ மரிகோ (Kaneko Marik) இலங்கை இந்தப் பணியை மீண்டும் தொடங்க முற்பட்டதாகவும் ஆனால் ஜப்பான் இந்த நேரத்தில் அது பற்றி விவாதிக்க வேண்டாம் என்று முடிவு செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கடன் மறுசீரமைப்பு
இலகு தொடருந்து திட்டத்திற்கான ஜப்பானிய உதவியானது இலங்கையின் கடன் நிலைத்தன்மை மற்றும் அதன் அளவைப் பொறுத்து அமையும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இது புதிய விதிமுறைகளில் புதிய திட்டமாக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், பொருளாதார நெருக்கடியால் தடைப்பட்ட ஏனைய திட்டங்கள் அனைத்தும், கடன் வழங்கும் நாடுகளுடன் கடன் மறுசீரமைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதும் மீண்டும் தொடங்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
இந்த திட்டங்களில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் விரிவாக்கமும் அடங்கும். இதேவேளை இலங்கை தொடர்பான உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவிற்கு ஜப்பான் தலைமை தாங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |