14 ஆண்டுகளுக்குப் பின் ஜப்பானின் மிகப்பெரிய அணுமின் நிலையம் மீண்டும் இயக்கம்
ஜப்பானின் டோக்கியோ மின்சக்தி நிறுவனம் (TEPCO), உலகின் மிகப்பெரிய அணுமின் நிலையமான காஷிவாசாகி-கரிவா (Kashiwazaki-Kariwa) நிலையத்தில் சுமார் 14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மின் உற்பத்தியைத் தொடங்கியுள்ளது.
2011ஆம் ஆண்டு ஏற்பட்ட புகுஷிமா அணு உலை விபத்திற்குப் பிறகு, பாதுகாப்பு காரணங்களுக்காக ஜப்பானின் பெரும்பாலான அணுமின் நிலையங்கள் மூடப்பட்டன.
அணுமின் நிலையம்
இந்தநிலையில், நிகாட்டா மாகாணத்தில் உள்ள காஷிவாசாகி-கரிவா அணுமின் நிலையத்தின் 6ஆவது அணு உலை (Reactor No. 6), நேற்றையதினம் (16) முதல் சோதனை அடிப்படையில் மின் உற்பத்தியைத் தொடங்கியுள்ளது.

இந்த உலை கடைசியாக 2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் மின்சாரத்தை விநியோகித்தமை குறிப்பிடத்தக்கது. நேற்று முன்தினம் மாலை அணு உலையின் டர்பைன்கள் இயக்கப்பட்டு, நேற்று முதல் மின்சாரம் கடத்தப்படும் பணிகள் (Transmission) ஆரம்பமாகின.
இந்த அணு உலை கடந்த ஜனவரி 21ஆம் திகதியே மீண்டும் இயக்கப்பட்டது. இருப்பினும், 'கட்டுப்பாட்டு தண்டுகள்' (Control rods) மற்றும் 'நியூட்ரோன் அளவிடும் கருவி' ஆகியவற்றில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.
மீண்டும் இயக்கம்
தற்போது 20% உற்பத்தியுடன் தொடங்கப்பட்டுள்ள இந்தப் பணி, படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வரும் மார்ச் 18 அன்று முழு அளவிலான வணிக ரீதியான மின் விநியோகத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜப்பான் அரசு தனது கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்கும் (Decarbonization) கொள்கையின் ஒரு பகுதியாக, கடுமையான பாதுகாப்புத் தரங்களை எட்டும் அணு உலைகளை மீண்டும் இயக்கத் தீர்மானித்துள்ளது.
இயற்கை எரிவாயு இறக்குமதியைக் குறைக்கவும், நாட்டின் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்யவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், புகுஷிமா விபத்தின் வடுக்கள் இன்னும் மறையாத நிலையில், இப்பகுதி மக்களிடையே இந்த மறுதொடக்கத்திற்கு சுமார் 60% வரை எதிர்ப்பு நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.