இலங்கையின் கடன் மறுசீரமைப்பு குறித்து விவாதிக்குமாறு மீண்டும் வலியுறுத்தும் ஜப்பான்
சர்வதேச நாணய நிதியம், இலங்கையுடன் 2.9 பில்லியன் டொலர் கடன் ஒப்பந்தத்தை எட்டிய நிலையில் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு குறித்து விவாதிக்குமாறு அனைத்து கடன் வழங்கும் நாடுகளையும் ஜப்பானிய நிதி அமைச்சர் ஷுனிச்சி சுசுகி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
இதனடிப்படையில் சீனா மற்றும் இந்தியா உட்பட அனைத்து கடன் வழங்கும் நாடுகளும் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு பற்றி விவாதிக்க ஒன்று கூடுவது முக்கியம் என்று ஷுனிச்சி சுசுகி நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.
ஒன்றுகூடலின் அவசியம்
முன்னதாக சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாட்டை எட்டுவதற்கு முன்னரும், ஜப்பானிய நிதியமைச்சர், இந்த ஒன்றுகூடலின் அவசியத்தை வலியுறுத்தியிருந்தார்.
இதற்கான ஏற்பாட்டை மேற்கொள்ளவும் ஜப்பான் தயார் என்றும் ஜப்பானிய நிதி அமைச்சர் ஷுனிச்சி சுசுகி குறிப்பிட்டிருந்தார்.
ரணிலின் கோரிக்கை
முன்னதாக இந்தியா, சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளை மையப்படுத்தி கடன் வழங்குனர்களின் மாநாட்டை நடத்துமாறு இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜப்பானை கேட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.