தொற்றாளர்களின் எண்ணிக்கையை குறைத்து காட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளை குறைத்துள்ள அரசாங்கம் - ஜே.வி.பி
தினமும் அடையாளம் காணப்படும் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 3500 இல் இருந்து 2200 என்ற குறைவான மட்டத்தில் இருப்பதாக காட்டுவதற்காக அரசாங்கம் பி.சி.ஆர் பரிசோதனைகளை 25 ஆயிரத்தில் இருந்து 17 ஆயிரம் வரை குறைத்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
3500க்கும் மேல் இருந்த தொற்றாளர்களின் எண்ணிக்கை தற்போது 2 ஆயிரத்தில் இருந்து 2200 வரை குறைந்துள்ளது என்ற சமிக்ஞையை வழங்கும் தேவை அரசாங்கத்திற்கு இருக்கின்றது.
இதனை எப்படி செய்வது. பி.சி.ஆர் பரிசோதனைகளை குறைத்து இதனை செய்கின்றனர். 25713 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை நடத்தியதாக கடந்த 20ஆம் திகதி சுகாதார அமைச்சு அறிவித்தது. இந்த எண்ணிக்கை கடந்த 22 ஆம் திகதி 22 ஆயிரத்து 824 ஆக குறைந்தது.
அது கடந்த 24ஆம் திகதி 17 ஆயிரமாக குறைந்தது. கடந்த 27ஆம் திகதி 18156 பி.சி.ஆர் பரிசோதனைகளே நடத்தப்பட்டுள்ளன. 18 ஆயிரத்தில் இருந்து 17 ஆயிரம் பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனைகளின் அடிப்படையிலேயே 2200 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தொற்று நோய் பரவல் சதவீதத்தில் இலங்கை இன்னும் மேல் மட்டத்தில் உள்ளது. அரசாங்கம் என்ன செய்கிறது. தொற்றாளர்கள் குறைந்து வருகின்றனர் என்று காட்ட அரசாங்கம் முயற்சித்து வருகிறது எனவும் நலிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.