ஜனாதிபதியாகும் தகுதி அனைவருக்கும் இல்லை: ஜானக வக்கும்புர
அனைவரும் ஜனாதிபதி வேட்பாளராக முடியும், ஆனால் ஜனாதிபதியாகும் தகுதி அனைவருக்கும் இல்லை என மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.
ஒன்றிணைவோம் வெற்றி பெறுவோம் என்ற தொனிப்பொருளில் பம்பலப்பிட்டி லோரிஸ் மாவத்தையில் அமைந்துள்ள ரணில் விக்ரமசிங்கவின் ஜனாதிபதி தேர்தல் ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க தீர்மானம்
அமைச்சர் மேலும் கூறியதாவது,
“2022ஆம் ஆண்டு இந்த நாட்டில் ஒரு பிரச்சினை எழுந்தபோது, அந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஜனாதிபதிக்கு ஆதரவளித்தது. ஏனெனில் அப்போது நாட்டைக் காப்பற்ற எவரும் முன்வரவில்லை.
ஜனாதிபதியினால் இந்த நாட்டை முன்பு இருந்த இடத்திற்கு கொண்டு வருவார் என்ற நம்பிக்கை எமக்கு இருந்தது. நாங்கள் எதிர்பார்த்தபடி அந்தச் சவாலை அவர் வெற்றிகரமாக வென்றார்.
எனவே எதிர்வரும் ஐந்து வருடங்களிலும் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளோம். அந்த வாய்ப்பை இழுத்தடிக்காமல் கொடுக்கச் சொல்கிறோம். ஆனால் சிலருக்குப் புரியவில்லை. மக்கள் பிரதிநிதிகள் எப்போதும் மக்களுக்கு செவிசாய்க்க வேண்டும்.
எங்கள் கட்சியில் இருந்து வேட்பாளர் ஒருவரை அறிவிப்போம் என்று கூறிய போதும் இதுவரை அறிவிக்கவில்லை.
மொட்டுக் கட்சியில் பெரும்பான்மையான எம்.பி.க்கள் எங்கே இருக்கிறார்கள் என்று பாருங்கள். அதிக மக்கள் இருக்கும் இடத்தில், அதிக சக்தி இருக்கும். சரி பொதுஜன பெரமுன எமக்கு அடுத்ததாக உள்ளது.
நாங்கள் பொதுஜன பெரமுனவை உருவாக்கினோம். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் பதவியில் இருந்து விலகி மொட்டுக் கட்சியில் சேர்ந்தேன்.
நாங்கள் கட்சியில் இணைந்த போது, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எங்களை வீட்டுக்கு அனுப்புவதாக கூறியது. நாங்கள் பயப்படவில்லை. வீட்டுக்குப் போவதை எதிர்பார்த்து மொட்டுக்கட்சியில் சேர்ந்தேன்.
ஜனாதிபதி தேர்தலின் பின்னர், யார் ஜனாதிபதியாக இருந்தாலும், மக்களின் கருத்துக்கு பணிந்து இந்த நாட்டில் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் கருத்தை துல்லியமாக பார்க்க முடியும்.
ஜனாதிபதி தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தோம்.
எனவே அவர் எந்தவொரு அரசியல் கட்சியிலிருந்தும் ஜனாதிபதி தேர்தலுக்கு வரமாட்டார்.
இப்போது வேட்பாளர்கள் உறுதிமொழி எடுத்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் நாடாளுமன்றத்தில் ஜனாதிபதிக்கு ஆதரவளித்தவர்கள். சவாலை ஏற்க பயந்து ஓடியவர்கள் தற்போது ஜனாதிபதி தேர்தலில் நிற்கின்றனர். அப்போது ஏன் அவர்களால் நாட்டைக் பொறுப்பேற்க முடியவில்லை?
இன்று பங்களாதேஷுக்கு நடந்ததுதான் அன்று நம் நாட்டில் நடக்க இருந்தது.
அந்தப் போராளிகள் நம் நாட்டுப் போராளிகளைப் போலத்தான் நடந்து கொள்கிறார்கள். ஆனால் ஒரு வித்தியாசம் உள்ளது.
வங்கதேச செயற்பாட்டாளர்கள் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அதிகாரத்தைக் கைப்பற்றினர். ரணில் விக்ரமசிங்க அவர்கள் பதில் ஜனாதிபதியாக வராவிட்டால் எமது நாடாளுமன்றத்திற்கும் இதே நிலைதான் ஏற்பட்டிருக்கும்.
நாடாளுமன்றத்தை காப்பாற்றி நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாத்தவர் தற்போதைய ஜனாதிபதி. எனவே, இன்று நாம் அனைவரும் அவருக்கு ஆதரவளிக்கிறோம்.
நாடு நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள போதிலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரச ஊழியர்களின் சம்பளத்தை 10,000 ரூபாவினால் அதிகரித்துள்ளார்.
8,400 அரசு ஊழியர்களின் சேவை உறுதி செய்யப்பட்டது. ஜனாதிபதி கோட்டாபயவினால் நியமிக்கப்பட்ட சுமார் 21,000 பல்நோக்கு ஊழியர்களின் சேவைகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
உலகின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்த நாட்டில் ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்தவர்களின் எண்ணிக்கை சுமார் 85 வீதமாகும்.” என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |