அமெரிக்காவில் நிதிமுறைகேடு: மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்த மனுவை உயா்நீதிமன்றமும் நிராகாித்தது
அமெரிக்காவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்ரமசூரிய, தனது இராஜதந்திர விலக்கு தொடா்பான இடைக்கால மனுவை நிராகரித்த மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை ஆட்சேபித்து, தாக்கல் செய்த மனுவை உயா்நீதிமன்றமும் நிராகாித்துள்ளது.
இந்தநிலையில் இராஜதந்திர சலுகைகள் மற்றும் வியன்னா உடன்படிக்கையின் அடிப்படையில் விக்கிரமசூரிய அனைத்து இராஜதந்திர சலுகைகளையும் விலக்குகளையும் தொடர்ந்து அனுபவித்து வருகிறார் என்று தெரிவித்து, அமெரிக்க அரசாங்கத்திற்கு கடிதம் மூலம் அறிவிக்குமாறு வெளியுறவு அமைச்சருக்கு உத்தரவு பிறப்பிக்கவும் உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
நீதியரசர் விஜித் கே.மலல்கொட பி.சி., நீதியரசர் குமுதுனி விக்கிரமசிங்க மற்றும் நீதியரசர் மகிந்த சமயவர்தன ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற மூவரடங்கிய நீதியரசா் குழாம், ஜாலிய விக்கிரமசூாியவினால் உயா் நீதிமன்றத்தின் முன்வைக்கப்பட்ட மேன்முறையீட்டில் எவ்விதத் தகுதியும் இல்லையெனக் குறிப்பிட்டு அவாின் மேன்முறையீட்டை நிராகரிக்க தீர்மானித்தது.
ஜாலிய விக்ரமசூரிய தனது இராஜதந்திர விலக்கை நீக்குவதற்கான இலங்கை வெளிவிவகார அமைச்சின் முடிவை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் 2018 மார்ச் 29ஆம் திகதியன்று நிராகரிக்கப்பட்டது.
இதனையடுத்தே மனுதாரா் உயா்நீதிமன்றத்தில் தமது மேன்முறையீட்டை தாக்கல் செய்தாா்.
அமெரிக்காவில் உள்ள இலங்கை தூதரகத்திற்கான கட்டிடம் ஒன்றை கொள்வனவு செய்வதற்காக ஒதுக்கப்பட்ட 6.6 மில்லியன் அமெரிக்க டொலர்களில் 3 லட்சத்து 30 ஆயிரம் அமெரிக்க டொலர்களை முறைகேடாக பயன்படுத்தியதாக ஜாலிய விக்ரமசூரியவிற்கு எதிராக நிதி மோசடி தொடா்பான காவல்துறையினா், கோட்டை நீதவான் நீதிமன்றில் ‘B’ அறிக்கையை தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விடயத்துக்காகவே அவா் இராஜதந்திர விலக்கை கோாியிருந்தாா் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.




