தையிட்டி விகாரைப் பிரச்சினை.. புத்தசாசன அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்
யாழ். தையிட்டி திஸ்ஸ விகாரை பிரச்சினைக்கு உடன் தீர்வு காணும் தன்மை கிடையாது என புத்தசாசனம் மற்றும் மத விவகாரங்கள், கலை கலாசாரங்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அமர்வின் போது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நிலையியற் கட்டளையின் 27.2 பிரகாரம் அண்மையில் முன்வைத்த கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், "யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வலிகாமம் வடக்கு, தையிட்டி பிரதேசத்தில் திஸ்ஸ விகாரை எனும் விகாரை ஒன்று உள்ளது. இந்த விகாரை பதிவு செய்யப்படவில்லை.
இந்த விகாரையின் காணி தொடர்பான விடயங்கள் ஆராயப்படுகின்றது. இந்தப் பகுதியில் இடம்பெறும் போராட்டங்கள் குறித்து பல கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. இந்தப் போராட்டங்கள் குறித்து அமைச்சுக்கு உத்தியோகபூர்வமாக ஏதும் அறிவிக்கப்படவில்லை. ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை அடிப்படையாகக் கொண்ட தகவல்களே உள்ளன.
வர்த்தமானி அறிவித்தல்
இந்த விகாரை அமையப் பெற்றுள்ள காணியானது காணி அமைச்சால் கைப்பற்றப்பட்டு வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்படவில்லை. காணி அரசுடடையாக்கல் சட்டத்தின் பிரகாரம் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்காத காரணத்தால் அதற்குரிய வர்த்தமானி அறிவித்தல் இதுவரையில் பிரசுரிக்கப்படவில்லை.
இந்தக் காணி தொடர்பில் அமைச்சு மட்டத்தில் எவ்வித தீர்வும் எடுக்கப்படாத நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்குரிய தீர்மானங்கள் ஏதும் எடுக்கப்படவில்லை. இந்தக் காணி தமக்குரியது என்று போராடும் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்குப் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளோம்.
ஜனாதிபதி எம்மை அழைத்து விரிவான கலந்துரையாடியுள்ளோர். யாழ் மாவட்ட சிவில் சமூகத்தினருடனும் கலந்துரையாடியுள்ளோம். தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான அலுவலகத்தின் தலைவர் ரொஹான் பிரனாந்துவின் தலைமையில் குழு நியமிக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தையிட்டிப் பிரச்சினைக்கு ஒரு இடத்தில் மாத்திரம் தீர்வு காண முடியாது. புத்தசாசனம் மற்றும் மத விவகாரங்கள் அமைச்சு, காணி அமைச்சு ஆகிய அமைச்சுக்கள் ஒன்றிணைந்தே இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும்.
தையிட்டி திஸ்ஸ விகாரை பிரச்சினைக்கு உண்மை நோக்கத்துடன் தீர்வு காண்பதற்கு எடுத்த நடவடிக்கைகளை ஆராய வேண்டும். இந்தப் பிரச்சினைக்கு உடன் தீர்வு காணும் தன்மை கிடையாது. நியமிக்கப்பட்டுள்ள குழுக்களின் தலையீட்டின் ஊடாக தையிட்டி திஸ்ஸ விகாரைப் பிரச்சினைக்குத் தீர்வு காண எதிர்பார்த்துள்ளோம்" என்றார்.



