வடக்கு - கிழக்கில் பெரும் நெருக்கடியில் சைவ சமய அடையாளங்கள் (video)
புதிய இணைப்பு
வடக்கு கிழக்கிலுள்ள சைவ சமய அடையாளங்களை பௌத்த அடையாளங்களாக நிலைநிறுத்தி சிங்கள பௌத்த நாடு என நிரூபிக்க இலங்கை அரசு முனைவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம்(05.08.2023) சுழிபுரத்தில் போராட்டமொன்று இடம்பெற்றது.
இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர், தமிழர்கள் வாழும் இடங்களைச் சிங்களமயப்படுத்துவதற்காக ஆரம்பத்தில் இருந்து யுத்தத்தின் மூலமாக தமிழர்களை அழித்து, நிலங்களைப் பறித்து இங்கிருந்து அகற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.
யுத்தத்திலே இனப்படுகொலையை செய்தார்கள் என சர்வதேச ரீதியில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. இந்த நேரத்தில் வடக்கு கிழக்கிலுள்ள சைவ சமய அடையாளங்களை பௌத்த அடையாளங்களாக நிலைநிறுத்தி சிங்கள பௌத்த நாடு என நிரூபிக்க நினைக்கின்றனர்.
அந்த முயற்சியினுடைய ஒரு கட்டமாக பறாளாய் முருகன் ஆலயத்திலுள்ள அரச மரத்தை சங்கமித்தை காலத்தில் நடப்பட்டதாகப் புனைந்து செய்தியைப் பரப்புகின்றனர்.
அதற்கெதிரான போராட்டமாகவே இது இடம்பெறுகின்றது என தெரிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
யாழ். சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலய வர்த்தமானி வெளியீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்த்து யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய மாணவர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயத்தில் உள்ள அரச மரத்தை சங்கமித்தை வந்து இறங்கிய பின்னர் அவருடன் தொடர்புபட்ட மரமாக சித்திரித்து வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக பல்வேறு தரப்பினரும் தமது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் சுழிபுரம் சந்திப் பகுதியில் இன்று(05.08.2023) காலை 10 மணி தொடக்கம் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
தொல்லியல் திணைகாகளமே வெளியேறு
போராட்டத்தின் போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாகைகளை ஏந்தியவாறு, "இந்த மண் எங்களின் சொந்த மண், மண் துறந்த புத்தருக்கு மண் மீது ஆசையா, இனப்படுகொலை இராணுவமே வெளியேறு, தொல்லியல் திணைகாகளமே வெளியேறு, பறாளாய் எங்கள் சொத்து, குருந்தூர் மலை எங்கள் சொத்து, கீரிமலை எங்கள் சொத்து, மயிலத்த மடு எங்கள் சொத்து, வெடுக்குநாறி மலை எங்கள் சொத்து" என கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், வேலன் சுவாமிகள், ஊர் மக்கள், சமூகமட்ட அமைப்புக்கள், ஆலய உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
மேலும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் சங்கானையில் இன்று பி.ப. 3 மணிக்கு போராட்டமொன்று ஒழுங்கமைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல் கஜிந்தன்









