ஈழ மண்ணின் விவசாயிகள் ஒவ்வொருவரும் தமிழ்த்தேசியப் போராளிகளே:பொ.ஐங்கரநேசன்
ஈழ மண்ணின் விவசாயிகள் ஒவ்வொருவரும் தமிழ்த்தேசியப் போராளிகளே என
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் விவசாயிகளுக்குப்
புகழாராம் சூட்டியுள்ளார்.
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் இராசதானியத் திட்டத்தின்கீழ் விதைகளைப் பெற்ற விவசாயிகளிடமிருந்து அறுவடையின் பின்னர் விதைகளை மீளப்பெறும் நிகழ்ச்சி நேற்றுமுன்தினம் (17.12.2022) அளவெட்டியில் நடைபெற்றுள்ளது.
இங்கு உரையாற்றிய போதே பொ.ஐங்கரநேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழ்த்தேசியம் என்ற வார்த்தை
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,தமிழ் மக்களின் ஆயுதப்போராட்டம் தோற்கடிக்கப்பட்டதற்குப் பின்னர், நமது அரசியல்வாதிகளில் பெரும்பாலானவர்கள் தங்களைத் தமிழ்த் தேசியப் போராளிகளாக வெளிக்காட்டி வருகின்றனர்.
அவர்கள் வாய்ச்சொல் வீரர்களாக இருக்கும்போது எமது விவசாயிகள் செயல்வீரர்களாக இருக்கிறார்கள். உண்மையில்,ஈழ மண்ணின் விவசாயிகள் ஒவ்வொருவரும் தமிழ்த்தேசியப் போராளிகளே.
தமிழ்த்தேசியம் என்ற வார்த்தை இன்று அரசியல்வாதிகள் உச்சரிக்கும் ஒரு சொல்லாக மாத்திரமே உள்ளது. தேசியம் என்பது அரசியல்வாதிகளுக்குரிய ஒன்றாக மாத்திரமே மக்களாலும் கருதப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
ஆனால் தேசியம் என்பது மக்களின் வாழ்நிலம், அவர்கள் பேசும் மொழி, அவர்களின் பண்பாடு, அவர்களின் பொருளாதாரம் ஆகிய நான்கு தூண்களில் கட்டப்பட்ட ஓர் உணர்வுபூர்வமான பிரக்ஞை ஆகும். அந்தவகையில், தமிழ்த்தேசியம் என்பது தமிழ் மக்களிடமே வாழ்கின்றது.
பொருளாதார நெருக்கடி
நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியால் இலங்கையிலுள்ள விவசாயிகள் அனைவரும் பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர். பசளைகள் இல்லாததாலும், எரிபொருள் இல்லாததாலும் எந்தவொரு விவசாயியாலும் உரிய அறுவடையைப் பெறமுடியவில்லை.

ஆனால், வடக்குக்கிழக்கு விவசாயிகள் ஏற்கனவே போரால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் என்ற வகையில் தற்போது இரட்டிப்பு மடங்காகப் பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
போர் நெருக்கடிகளின் போதும் எமது விவசாயிகள் மண்ணைவிட்டு இடம்பெயரவில்லை. அறுவடை பொய்த்தபோதும் விவசாயத்தைவிட்டு விலகவில்லை அடுத்தமுறையாவது அறுவடை கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு வயலில் கண்ணீரோடும் வியர்வையோடும், இன்றளவும் உழுது கொண்டுதான் இருக்கிறார்கள்.
எமது மக்களின் உணவுப்பாதுகாப்பு கேள்விக்குறியாகியிருக்கும் இன்றையநிலையில் விளைநிலங்களில் நாளாந்தம் போராடும் எங்களின் விவசாயிகளை விடவா வேறு தமிழ்த்தேசியப் போராளிகள் இருக்கப்போகிறார்கள்?.”என தெரிவித்துள்ளார்.
நீதா அம்பானி பயன்படுத்தும் தங்க தண்ணீர் போத்தல்., அதன் விலைக்கு ஒரு வீட்டையே வாங்கலாம் News Lankasri