கொழும்பில் சுகபோகங்களை அனுபவிக்கும் யாழ். நாடாளுமன்ற உறுப்பினர்கள்! சிங்கள ராவய அமைப்பு சாடல் (Video)
யாழ். மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பில் சுகபோக வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டு இருப்பதாக சிங்கள ராவய அமைப்பு உள்ளிட்ட கடும்போக்குவாத சிங்கள அமைப்புக்கள் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளன.
யாழில் உள்ள சிங்கள மக்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகள் குறித்து கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் கிளைக் காரியாலயத்தில் முறைப்பாடொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சிங்கள ராவய அமைப்பு உள்ளிட்ட கடும்போக்குவாத சிங்கள அமைப்புக்களால் இந்த முறைப்பாடு தொடர்பான கடிதம் சபையின் அதிகாரியிடம் நேற்று (07.08.2023) கையளிக்கப்பட்டுள்ளது.
இதன்போது குறித்த அமைப்பினர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையில், கறுப்பு ஜுலை இன அழிப்பை தொடர்ந்து யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளில் இருந்த சிங்களவர்கள் பலவந்தமாக வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில், இலங்கை பாதுகாப்பு படையினர் தமிழ் மக்களை துன்புறுத்துவதாக அவர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டு பொய்யானது. யாழ்ப்பாணத்தை விட அதிகளவான தமிழ் மக்கள் கொழும்பில் இருக்கிறார்கள்.
அத்துடன், யாழ். மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பில் தான் இருக்கிறார்கள். அவர்கள் இங்கு சுகபோக வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டு இனவாதத்தை தூண்டும் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள்.
சிங்கள மக்களின் மனித உரிமைகளும் இந்த நாட்டில் பாதுகாக்கப்பட வேண்டும்.
இந்த நிலையில், தமிழ் மற்றும் சிங்களம் உள்ளிட்ட அனைத்து மக்களும் சமாதானத்துடன் வாழக்கூடிய சூழ்நிலையை உருவாக்குமாறு நாம் அரசாங்கத்திடம் கோருகிறோம் என கோரிக்கை விடுத்துள்ளனர்.






