யாழில் பொலிஸாரை கத்தியை காண்பித்து அச்சுறுத்திய ஆவா குழுவினர்! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
யாழ்.கோப்பாய் பொலிஸாரை வீதியில் வைத்து கத்தியை காண்பித்து அச்சுறுத்தி தப்பிச்சென்ற ஆவா குழுவினை சேர்ந்த இருவர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையில் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உரும்பிராய் சந்தியில் கடந்த வாரம் வீதிப்போக்குவரத்து ஒழுங்கு பணியில் ஈடுபட்டிருந்த கோப்பாய் பொலிஸார், மோட்டார் சைக்கிளில் வந்த இருவரை மறித்து சோதனையிட முற்பட்டுள்ளனர்.
இதன்போது பொலிஸாருக்கு கிறீஸ் கத்தியைக் காண்பித்து அச்சுறுத்தி மோட்டார் சைக்கிள், தேசிய அடையாள அட்டை என்பவற்றைக் கைவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.
நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
இதனை தொடர்ந்து மோட்டார் சைக்கிள் மற்றும் தேசிய அடையாள அட்டை என்பவற்றை மீட்ட பொலிஸார் நீதிமன்றில் சமர்ப்பிப்பதற்காக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் வைத்துள்ளனர்.
இதன்போது பொலிஸாரை அச்சுறுத்தி தப்பியோடிய இருவரும் நேற்று (04.05.2023) தமது சட்டத்தரணி விசுவலிங்கம் திருக்குமரன் ஊடாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து சந்தேகநபர்கள் இருவரும் நேற்று (04.05.2023) யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் இருவர் சார்பிலும் பிணை விண்ணப்பம் முன்வைக்கப்பட்ட போதும்
அதனை நிராகரித்த மன்று இருவரையும் எதிர்வரும் 17ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க
உத்தரவிட்டுள்ளது.



