கியூ.ஆர் குறியீட்டு முறையில் பெட்ரோல் விநியோகம்(video)
நாடளாவிய ரீதியில் அங்காங்கே சீரான முறையில் எரிபொருள் விநியோகம் முன்னெடுக்கப்படுகின்றது.
வடமராட்சி
வடமராட்சி - நெல்லியடி மற்றும் குஞ்சர்கடை ஆகிய எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கியூ.ஆர் குறியீட்டு முறையில் நேற்றைய தினம் பெட்ரோல் விநியோகிக்கப்பட்டுள்ளது.
கியூ.ஆர் குறியீட்டு முறை மூலம் உறுதிப்படுத்தல் மற்றும் தரவேற்றம் செய்யப்பட்டு, பிரதேச செயலாளரால் வழங்கப்பட்ட அட்டையிலும் பதிவு செய்யப்பட்டே பெட்ரோல் விநியோகம் இடம்பெற்றுள்ளது.
கியூ.ஆர் குறியீடு இல்லாதவர்களுக்கு பிரதேச செயலாளரால் வழங்கப்பட்ட அட்டைக்கு ரூபா 1500 வீதமும், கியூ.ஆர் குறியீடு உள்ளவர்களுக்கு 1800 வீதமும் மோட்டார் சைக்கிள்களுக்கு எரிபொருள் வழங்கப்பட்டுள்ளன.
அதேவேளை முச்சக்கரவண்டிகளுக்கு 2250 ரூபாவிற்கு எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளது. இந்த விநியோகம் கரவெட்டி பிரதேச செயலாளர் தயாரூபனின் கண்காணிப்பில் இடம்பெற்றுள்ளதுடன், இந்த நடவடிக்கையில் பிரதேச செயலக ஊழியர்களும் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
இதேவேளை பிரதேச செயலகத்தால் வழங்கப்பட்ட அட்டைகளுக்கு நேற்று பருத்தித்துறை கொட்டடி எரிபொருள் நிரப்பு நிலையத்திலும், வல்வெட்டித்துறை ஊறணி எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் பெட்ரோல் விநியோகம் இடம்பெற்றுள்ளது.
வடமராட்சி வடக்கு பிரதேச செயலாளர் ஆ.சிறி கண்காணிப்பில் அவரது செயலக ஊழியர்களால் விநியோக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மேலும் குறித்த ஊறணி எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர், அந்த பகுதியில் நோயினால் பாதிக்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலைக்கு செல்ல வேண்டியவர்களுக்கான முச்சக்கரவண்டிக்கு தேவையான பெட்ரோலை மனிதாபிமான அடிப்படையில் பலருக்கும் வழங்கியுள்ளார்.
வல்வெட்டித்துறை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மீனவர்களுக்கு தலா ஒவ்வொரு லீட்டர் பெட்ரோல் வழங்கப்பட்ட போதிலும் பலருக்கு வழங்கப்படாமல் முன் அறிவிப்பின்றி வடமராட்சி வடக்கு பிரதேச செயலாளர் அறிவிப்பின் பெயரில் இடைநிறுத்தப்பட்டிருந்தது.
குறித்த எரிபொருள் நிரப்பு நிலைய பகுதியில் வீதி ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை பொலிஸாரும், இராணுவத்தினரும் வழங்கியுள்ளனர்.
இதேவேளை அந்த பிரதேச மக்கள் எரிபொருளை பெற்றிருந்த போதிலும் டீசலுக்கான பல வாகனங்கள் கடந்த மூன்று நாட்களாக காத்திருப்பதாகவும் தெரியவருகிறது.
கிழக்கு மாகாணம்
கிழக்கு மாகாண கூட்டுறவு ஆணையாளர் அஸ்மி ஆதம்லெவ்வையின் ஆலோசனையிலும் நிருவாக சபை மற்றும் ஊழியர்களின் பங்களிப்புடனும் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விநியோகச் செயற்பாடு தொடர்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீரான எரிபொருள் விநியோகத்திற்கு தமக்கான ஒரு மென்பொருளை உருவாக்கி 1250க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு மக்கள் சஞ்சலம் ஏதுமின்றி எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் பெற வந்த வாகனங்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு அனுமதியற்ற எவருமே உள் நுழைய முடியாதபடி தடுப்புக்கள் போடப்பட்டிருந்தது.
எரிபொருளை பெற வாகனம் நுழைகின்ற போதே கணணி இயக்குனர் வாகன இலக்கத்தகட்டை பார்த்து அதனை கணணிப்படுத்தி பதிவு செய்து 1500 ரூபாவிற்கும் 2000 ரூபாவிற்கும் 7000 ரூபாவிற்கும் விநியோகிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான முறையூடாக எரிபொருள் பதுக்கலைத் தடுக்க முடிவதுடன், குறித்த சில நபர்கள் மீண்டும் மீண்டும் வருவதை நிறுத்த முடிந்ததைக் காணலாம். மேற்படி விடயங்கள் முற்றுமுழுதாக ஓட்டமாவடி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் நிர்வாகத்தின் மேற்பார்வையில் இடம்பெற்று வருவதாக கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.எம்.ஏ.ஹாதி தெரிவித்துள்ளார்.
மேலும் நோயாளிகளின் வைத்திய தேவை கருதியும், மத வழிபாட்டுத் தலங்ககளில் கடமை புரிகின்றவர்களுக்கும் எரிபொருள் விநியோகம் இடம்பெற்றுள்ளது.
அதே நேரத்தில் பின்னூட்டமிட்டவர்கள் சீர்செய்யப்பட வேண்டிய தவறுகள் தொடர்பிலும் பல்வேறு ஆலோசனைகளையும் தெரிவித்துள்ளனர்.
அதில் பொருத்தமானவைகளையும் கவனத்திற் கொள்ளுமிடத்து மேலும் சிறப்பான சேவையை முன்னெடுக்க முடியும் என பிரதேச சமூக ஆர்வளர்கள் கருது தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
முல்லைத்தீவு
முல்லைத்தீவு மாவட்டத்திலும் கியூ.ஆர் குறியீடு முறையின் மூலம் எரிபொருள் விநியோகம் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வந்துள்ளது.
கியூ.ஆர் குறியீடு முறை நடைமுறைப்படுத்தல் தொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மற்றும் செயலகத்தின் தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப உத்தியோகத்தர் உள்ளிட்டோர் இன்று(27) நேரில் சென்று கண்காணித்துள்ளனர்.
எரிபொருள் விநியோக கியூ.ஆர் குறியீடு முறை அடுத்த மாதம் முதலாம் திகதி தொடக்கம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இவற்றுக்கான பொறி முறையினை முல்லைத்தீவு மாவட்ட செயலகம் சிறப்பான முறையில் மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதன்போது கியூ.ஆர் குறியீடு முறை செயற்படுத்தப்பட்டு வருவதையும் ஏனைய எரிபொருள்
நிரப்பு நிலையங்களில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் கேட்டறிந்துள்ளமை
குறிப்பிடத்தக்கது.