மின் துண்டிப்பை தடுக்க அரசிடம் தீர்வு இல்லை: ரணில் அரசாங்கம் தோல்வி என்கிறார் சந்திரசேகரன்
மின் துண்டிப்பை தடுக்க தீர்வு வழங்க முடியாத ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் தோல்வி அடைந்துள்ளது என மக்கள் விடுதலை முன்னணியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர் இ.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்றைய தினம்(10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
ரணில் அரசாங்கம் தோல்வி
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கடந்த ஆண்டு ஏற்பட்ட மின்வெட்டுனால் பாரிய பிரச்சினைகள் ஏற்பட்டது. விசாரணைகள் நடத்தப்பட்டது அந்த விசாரணை அறிக்கை தற்போது குப்பை தொட்டிக்குள் காணப்படுகின்றது.
அரசாங்கம் தோல்வியடைந்தது என்பது நேற்றைய நிலையின் மூலம் தெளிவாகின்றது. மின் துண்டிப்பை தடுக்க தீர்வு வழங்க முடியாத ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் தோல்வி அடைந்துள்ளது.
கடந்த வருடத்தில் நூற்றுக்கு 15 வீதம் வற்வரி அதிகரிக்கப்பட்டு பொருட்கள் விலைகள் அதிகரிக்கப்பட்டது. ஐ.எம்.எப். கடனுக்கு நிபந்தனைகளை விதிக்கப்படுகின்றது. அதற்கு வற்வரி 18 வீதமாக உயரவுள்ளது.எல்லா துறைகளிலும் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
வற்வரி சம்பந்தமான இன்றைய நாடாளுமன்ற அமர்வில் நாடாளுமன்றில் போதிய கோரம் இல்லாததால் நாடாளுமன்ற அமர்வு நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் வீட்டில் இருந்து ஓய்வெடுக்கிறார்கள். நாடு அதலபாதாளத்தை நோக்கி போகிறது. ரணில் விக்ரமசிங்க எம்மை மீட்டார் என பலர் நம்புகின்றனர். ஆனால் அப்படி இல்லை. எமது நாடு வங்குரோத்து அடைந்துள்ளது.
லாபம் ஈட்டும் நிறுவனங்கள் தாரை வார்க்கப்படுகிறது. அதன் மூலம் டொலரை பெற ரணில் ராஜபக்ச அரசாங்கம் முயல்கிறது. அது வரிசை யுகத்தில் மீண்டதாக கருத முடியாது.மக்கள் மூன்று வேளை சாப்பிட முடியாதுள்ளது. மருந்து தட்டுப்பாடால் மக்கள் மரணத்தை தழுவுகின்றார்.
நாடாளுமன்றில் கூட கோரத்தை கொண்டு வர முடியாத தோல்வியடைந்த அரசாங்கத்தை விரட்டி அடிக்க வேண்டும். 10 மாதங்களில் இந்த நாட்டை வஞ்சித்த ஈவிரக்கமற்ற அனைவரையும் விரட்டி அடித்து மக்கள் அரசாங்கத்தை அமைக்க மக்கள் தயாராக வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |