சம்பந்தனின் மறைவிற்கு யாழ்ப்பாணம், கிளிநொச்சி முஸ்லிம் பேரவை இரங்கல்
சம்பந்தன் ஐயாவின் மறைவு இலங்கை தமிழ் பேசும் மக்களுக்கு ஈடுசெய்ய முடியாத மாபெரும் இழப்பு என யாழ்ப்பாணம் கிளிநொச்சி முஸ்லிம் பேரவை செயலாளர் என்.எம்.அப்துல்லாஹ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவரது இரங்கல் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கை தமிழ் - முஸ்லிம் உறவின் இணைப்புக்கான அடையாளமும், இலங்கையின் சிரேஸ்ட அரசியல் ஆளுமையுமாகிய இலங்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் (பா.உ) அவர்களின் மறைவு இலங்கை அரசியல் பரப்பிலும், தமிழ் பேசும் மக்கள் மத்தியிலும் ஈடுசெய்யப்பட முடியாத வெற்றிடத்தையும், இழப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
நிரந்தரத் அரசியல் தீர்வு
அன்னார் காலமான செய்தி யாழ்ப்பாணம் முஸ்லிம் மக்கள்
மத்தியில் அதிர்ச்சியையும், ஆழ்ந்த கவலையும் ஏற்படுத்தியிருக்கின்றது.
சம்மந்தன் ஐயா அவர்களின் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தமிழ் மக்களின் நிரந்தரத் அரசியல் தீர்வுக்கான அனைத்து மட்டத்திலான நீண்டகால அரசியல் முன்னெடுப்புக்களிலும் இலங்கை முஸ்லிம் மக்களையும் இணைத்து தமிழ்பேசும் மக்களாக ஒன்றிணைத்து முன்னெடுத்திருந்தமையே அவரது தலைமைத்துவம் மற்றும் ஆளுமையை வெளிக்காட்டுகின்றது.
கட்சி அரசியலுக்கு அப்பால் அனைத்து மக்களையும் அரவணைத்துச் செல்லும் அவரது பண்பே அரசியலில் அவரை மாபெரும் இடத்திற்கு கொண்டு சென்றது எனலாம்.
அரசியல் தலைவர்கள்
அரசியலில் ஜனநாயகம், சமாதானம், ஐக்கியம் உள்ளிட்டவற்றை ஒவ்வொரு தருனங்களிலும் தொடர்ச்சியாக வலியுறுத்தி அதன் அடிப்படையிலேயே செயற்பட்டிருந்தார்.
நாட்டின் சிங்கள அரசியல் தலைவர்கள் உட்பட சர்வதேச நாடுகளின் தலைவர்கள் சர்வதேச நாடுகளின் இராஜதந்திரிகளும் மற்றும் நாட்டின் அனைத்து இன மக்களும் பெரிதும் மதிக்கும் இலங்கையின் சிரேஸ்ட அரசியல் தலைவராவார்.
தனது மக்களின் தீர்வுக்காக இறுதிவரை போராடிய பெருந் தலைவரையே இலங்கை தமிழ்பேசும் சமூகம் இன்று இழந்து நிற்கின்றது.
அன்னாரின் இழப்பால் துயருற்றிருக்கும் இலங்கை மக்கள், தமிழ்பேசும் மக்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் அன்னாரது குடும்பத்தினர் அனைவரோடும் இணைந்து யாழ்ப்பாணம் முஸ்லிம் மக்களாகிய நாமும் துயர் பகிர்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |