காலி மார்வெல்ஸ் அணி புள்ளிப்பட்டியிலில் முதலிடம்
லங்கா ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 5 ஆவது போட்டியில் காலி மார்வெல்ஸ் அணி 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.
கண்டி பல்லேகலை சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் காலி மார்வெல்ஸ் மற்றும் கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணிகள் மோதின. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய காலி மார்வெல்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 179 ஓட்டங்களைப் பெற்றது.
துடுப்பாட்டத்தில் காலி மார்வெல்ஸ் அணியின் சார்பில் இசுரு உதாண 52 ஓட்டங்களையும், நிரோஷன் டிக்வெல்ல 50 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
இந்த நிலையில் 180 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 172 மாத்திரமே பெற்று தோல்வியைத் தழுவியது.
ஜப்னா கிங்ஸ் அணி
மேலும் நேற்று இடம்பெற்ற லங்கா பிரீமியர் லீக்கின் (LPL) நான்காவது போட்டியில் தம்புள்ள சிக்ஸர்ஸ் அணியை எதிர்த்தாடிய ஜப்னா கிங்ஸ் அணி அவிஷ்க பெர்னாண்டோ மற்றும் சரித் அசலங்கவின் அதிரடியுடன் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
கண்டி – பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஜப்னா கிங்ஸ் மற்றும் தம்புள்ள சிக்ஸர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இதில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட தம்புள்ள சிக்ஸர்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 192 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
தம்புள்ள சிக்ஸர்ஸ் அணிக்காக ஆரம்ப வீரராக களமிறங்கிய குசல் பெரேரா அதிரடியான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினார். ஆரம்பத்தில் ஓட்டங்களை மந்தமாக பெற்றாலும், தொடர்ந்து அதிரடியை வெளிப்படுத்தினார்.
இதன்மூலம் LPL தொடர் வரலாற்றில் ஐந்தாவது சதத்துடன், வேகமான சதத்தையும் (50 பந்துகள்) பதிவுசெய்த இவர், T20 போட்டிகளில் இவருடைய முதல் சதத்தையும் பெற்றார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் துடுப்பெடுத்தாடிய குசல் பெரேரா 52 பந்துகளில் 102 ஓட்டங்களை பெற்றதுடன், நுவனிது பெர்னாண்டோ 35 பந்துகளில் 40 ஓட்டங்களையும், மார்க் செப்மன் ஆட்டமிழக்காமல் 23 பந்துகளில் 33 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பந்துவீச்சில் தனன்ஜய டி சில்வா 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தம்புள்ள சிக்ஸர்ஸ் அணி நிர்ணயித்த கடினமான வெற்றியிலக்கை நோக்கி களமிறங்கிய ஜப்னா கிங்ஸ் அணி ஆரம்பத்தில் தடுமாறியது.
குசல் மெண்டிஸ், பெதும் நிஸ்ஸங்க மற்றும் ரெய்லி ரூஷோவ் ஆகியோர் ஆட்டமிழக்க 36 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. எனினும் முதல் போட்டியில் அரைச்சதம் விளாசிய அவிஷ்க பெர்னாண்டோ அதிரடியாக ஓட்டங்களை பெற ஆரம்பித்தார்.
இவர் வெறும் 21 பந்துகளில் அரைச்சதம் அடித்து அணிக்கு நம்பிக்கை கொடுக்க, மறுமுனையில் நிதானமாக ஆடிய சரித் அசலங்க, நிமேஷ் விமுகத்தி வீசிய 15வது ஓவரில் 4 சிக்ஸர்களை விளாசி ஜப்னா அணியை வெற்றிக்கு அருகில் அழைத்துச்சென்றார்.
எவ்வாறாயினும் சிறப்பாக ஆடிய இவர்களில் சரித் அசலங்க 50 ஓட்டங்களுடனும், அவிஷ்க பெர்னாண்டோ 34 பந்துகளில் 80 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்க சற்று நெருக்கடியை ஜப்னா கிங்ஸ் அணி சந்தித்தது.
குறிப்பாக கடைசி ஓவரில் நான்கு ஓட்டங்கள் என்ற நிலையில், கடைசி பந்துவரை போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. கடைசி பந்தில் ஒரு ஓட்டம் என்ற நிலையில் பெபியன் எலன் சிக்ஸர் ஒன்றை விளாசி அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றார்.
இறுதியில் ஜப்னா கிங்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 197 ஓட்டங்களை பெற்று வெற்றிபெற்றத. பந்துவீச்சில் முஷ்தபிசூர் ரஹ்மான் மற்றும் நுவான் துஷார ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |