யாழ். கண் சத்திரசிகிச்சை விசேட வைத்திய நிபுணர் ஜனாதிபதிக்கு அவசரக்கடிதம்
யாழ். போதனா வைத்தியசாலையின் சிரேஷ்ட கண் சத்திரசிகிச்சை விசேட வைத்திய நிபுணர் எம். மலரவன் ஜனாதிபதிக்கு அவசர கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளார்.
எம். மலரவன், வடமாகாணம் முழுவதும் காத்திருத்தல் நேரத்தினை பூச்சியமாக்கி கண் வெண்புரை சத்திரசிகிச்சை உள்ளிட்ட ஏனைய கண் தொடர்பான பிரச்சினைகளுக்கு சிகிச்சைகளை உடனுக்குடன் வழங்கும் செயற்றிட்டத்தினை வெற்றிகரமாக முன்னகர்த்திகச் சென்று தேசிய ரீதியில் பாராட்டுதல்களினை பெற்ற விசேட வைத்திய நிபுணர் ஆவார்.
அவர் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள அவசர கடிதத்தில், இலங்கையின் சுகாதாரக் கட்டமைப்பில் உடனடியாக கண் சுகாதாரம் தொடர்பான மூலோபாயத் திட்டமொன்றினை உருவாக்கி அதனை செயற்படுத்த வேண்டியதன் அவசியத்தினை வலியுறுத்தியுள்ளார்.
முக்கிய கோரிக்கை
இலங்கையின் பல்வேறு சுகாதாரக் குறிகாட்டிகள் அபிவிருத்தியடைந்த நாடுகளுக்கு ஒப்பானதாக காணப்படுகிற பொழுதும் கண் சுகாதாரக் குறிகாட்டிகள் பிராந்திய அண்டை நாடுகளினை விடப் பின்னடைந்து காணப்படுவது தொடர்பில் அவர் இந்த கடிதத்தில் கரிசனையை வெளிப்படுத்தியுள்ளார்.

இலங்கையின் கண் சிகிச்சை சேவைகள் முதனிலை சுகாதார சேவைளுடன் ஒருங்கிணைக்கப்படாமலும் அவற்றின் ஒரு பாகமாக உள்வாங்கப்படாமலும் உள்ள நிலமையால் கண் பார்வை இழப்பு அல்லது பாதிப்பு அதிகரித்து செல்வதாக, குறிப்பாக வயது வந்தவர்களில் அதிகரித்து செல்வதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால் வாழ்க்கைத் தரம், உற்பத்தித்திறன் என்பன பாதிக்கப்படுவதுடன் பார்வை இழந்தவர்களை அதிகளவில் பராமரிக்க வேண்டிய தேவை சமூகத்துக்கும், குடும்பங்களுக்கும் நாட்டுக்கும் ஏற்படுவது பெரும் சுமையாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலைமைகளிலிருந்து நாட்டினையும் மக்களினையும் மீட்டெடுக்க சுகாதாரக் கட்டமைப்பில் உடனடியாக கண் சுகாதார தொடர்பான மூலோபாயத் திட்டமொன்றினை உருவாக்கி அதனை செயற்படுத்த வேண்டியதன் அவசியத்தினை அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த கடிதத்தின் பிரதிகள் பிரதமர், சுகாதார அமைச்சர், பிரதி சுகாதார அமைச்சர், சுகாதார அமைச்சின் செயலாளர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வட மாகாண ஆளுநர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri
நடிகை குஷ்புவா இது.. 20 வயதில் அடையாளம் தெரியாத அளவுக்கு எப்படி இருந்திருக்கிறார் பாருங்க! Cineulagam