யாழ்ப்பாண மாவட்டத்திற்கான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் (Photos)
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று(26) நடைபெற்றுள்ளது.
மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணைத் தலைவர்களான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் பி.எச்.எம். சாள்ர்ஸ் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
கலந்துரையாடல்
இதன் போது கல்வி, சுகாதாரம், கால்நடை, விவசாயம், கமநல சேவைகள், போக்குவரத்து, காணி, நீர்வழங்கல், உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டு தீர்மானங்களும் எடுக்கப்பட்டுள்ளது.
விவசாயத் திணைக்களத்தினால் இந்த வருடத்திற்கான முன்மொழிவு ஒருங்கிணைப்பு குழுவின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட போது குறித்த விடயம் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநரால் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
அதாவது அரசாங்க நிதியில் செயற்படுத்தப்படும் செயற்திட்டத்தினை வருட இறுதியில் நடைமுறைப்படுத்த அனுமதி கோரினால் எவ்வாறு அந்த திட்டத்தினை செயற்படுத்த முடியும்? அவ்வாறு செயற்படுத்த முடியாது இது ஒரு நையாண்டியான விடயம் என கடுமையான தொனியில் அதிகாரிகளை எச்சரித்துள்ளார்.
குறிப்பாக மக்களுக்கான திட்டங்களை இந்த ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஏன் தெரியப்படுத்துவதென்றால் மக்கள் பிரதிநிதிகள் அதனை ஏற்று அதற்குரிய ஒப்புதலை வழங்குவதற்காகவே எனவே எதிர்வரும் காலங்களில் இவ்வாறு செயற்பட வேண்டாம் என ஆளுநர் அதிகாரிகளிடம் கோரியுள்ளார்.
இக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், எம்.ஏ.சுமந்திரன், அங்கஜன் இராமநாதன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகள், பொலிஸ் அதிகாரிகள், அரச திணைக்களத் தலைவர்கள், அதிகாரிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.