உண்மையான வடக்கின் வசந்தம் 2025ஆம் ஆண்டு முதல்! அமைச்சர் சந்திரசேகரன்
உண்மையான வடக்கின் வசந்தம் 2025ஆம் ஆண்டு முதலே வீசும் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
யாழ்(Jaffna)மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் தொடர்பில் நேற்றைய தினம்(13) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அபிவிருத்தி திட்டங்கள்
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், கடந்த காலங்களில் ஒதுக்கப்பட்ட நிதிகளில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் கூட்டத்தில் முக்கியமாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்துடன் இனிவரும் காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் ,அது தொடர்பான முன்மொழிவுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இதில் முக்கியமாக வெள்ள அனர்த்தம் தொடர்பில் பேசப்பட்டது.
வெள்ளத்திற்கு தீர்வு காணும் முகமாக முன் மொழிவு வைக்கப்பட்டு, அதற்காக சுமார் 250 மில்லியன் ரூபாய் கோரப்பட்டுள்ளது.
கிராம மக்களின் வாழ்வாதாரம்
அந்த நிதி கிடைக்கப்பெற்றால் வேலைகள் முன்னெடுக்கப்படும். வடமாகாண ஆளுநரால் பல்வேறு திட்ட முன்மொழிவுகள் முன் வைக்கப்பட்டுள்ளன அவை தொடர்பில் அமைச்சரவையில் முடிவெடுத்து அனுமதிகள் கிடைக்கப்பெற்றதும் வேலை திட்டங்கள் முன்னெடுக்கப்படும்.
கிராமங்களை நோக்கியே திட்டங்கள் முன் வைக்கப்பட்டு, நிதி ஒதுக்கப்படும். கிராம மக்களின் வாழ்வாதாரங்களை உயர்த்துவதே எமது நோக்காகும்.
விசேடமாக கடற்தொழிலாளர்கள் பிரச்சனைகளை தீர்த்து அவர்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்த உள்ளோம். கடந்த கால குறைகளை நிவர்த்தி செய்து ஆரோக்கியமான சமூகத்தை கட்டி எழுப்புவோம் என மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |