யாழ். மத்திய கல்லூரியில் ஏற்பட்ட குழப்பநிலை.. வெளியேறிய அமைச்சர்
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் நீச்சல் தடாக புனரமைப்பு பணிகளின் ஆரம்ப கட்ட நிகழ்வில் வைக்கப்பட்ட நினைவுக்கல்லை திரை நீக்கம் செய்ய மறுத்து விளையாட்டு துறை அமைச்சர் சுனில் குமார கமகே வெளியேறியுள்ளார்.
நீண்ட காலமாக பராமரிப்பின்றி கைவிடப்பட்ட நிலையில் உள்ள குறித்த நீச்சல் தடாகத்தினை புனரமைப்பதற்கான பணிகளை எவ்வாறு முன்னெடுப்பது என்ற குழப்பநிலை காரணமாக அவர் வெளியேறியதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றைய தினம், (23) புனரமைப்பு நடவடிக்கையின் ஆரம்ப கட்ட வேலைகளை முன்னெடுக்க விளையாட்டு துறை அமைச்சர் சுனில் குமார கமகே யாழ். மத்திய கல்லூரிக்கு விஜயம் செய்துள்ளார்.
நினைவுக்கல் திரை நீக்கம்
இந்நிலையிலேயே இந்த குழப்பநிலை ஏற்பட்டதாகவும் அமைச்சர் திரை நீக்கம் செய்ய மறுத்து வெளியேறிதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச காலத்தில் ஆழம் கூடிய டைவிங் நீச்சல் தடாகம் யாழ். மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.
சில வருடங்களிலேயே குறித்த நீச்சல் தடாகம் பராமரிப்பின்றி கைவிடப்பட்ட நிலையில் தற்போதைய அரசாங்கம் மீளவும் அதனை புனரமைக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இதற்கிடையில், கல்லூரிக்கு விஜயம் செய்த விளையாட்டு துறை அமைச்சர் தடாகத்தை பார்வையிட்டதுடன், புனரமைப்பு பணிகள் தொடர்பில் யோசனை ஒன்றை முன்வைத்துள்ளார்.
மாறுபட்ட கருத்துக்கள்..
அதாவது, "டைவிங் நீச்சல் தடாகம் எனும் போது ஒரு குறிப்பிட்டளவானவர்களே பயன்படுத்துவார்கள் என்றும் அதே நேரம் சாதாரணமான ஆழம் குறைந்த நீச்சல் தடாகமாக இதை மாற்றினால் பெரும்பாலானவர்கள் பயன்படுத்துவார்கள்.

பொது நிதியில் செய்யும் போது அதிகளவிலானோருக்கு அது நன்மை அளிக்கும் என்று முடிவு எடுத்து அவ்வாறு செய்யலாம்" என குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் தடாகத்தை உள்ளவாறே புனரமைத்து தருமாறு ஒரு தரப்பும் சாதாரண நீச்சல் தடாகமாக மாற்றி புனரமைத்தாலும் பிரச்சினை இல்லை என கூறி அமைச்சரின் கருத்தையும் ஏற்று மற்றொரு தரப்பும் கருத்து தெரிவித்ததால் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, குறித்த புனரமைப்புக்கான நினைவுக் கல் திரை நீக்கம் செய்ய மறுத்து அமைச்சர் வெளியேறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



500 உயிர்களைக் காத்த இந்திய கடற்படையின் துரித நடவடிக்கை... ஐ.நா.வுக்கான தூதர் வெளிப்படை News Lankasri