யாழ். மாநகரசபையின் வரவு - செலவு திட்டம் தொடர்ச்சியாக தோற்கடிப்பு! பதவியை இழந்தார் ஆர்னோல்ட்
யாழ். மாநகர சபையின் 2023ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் ஆறு மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
யாழ். மாநகர சபையின் 2023ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் இன்றைய தினம் (28.02.2023) மாநகர முதல்வர் இமானுவேல் ஆனால்ட் இரண்டாவது தடவையாகச் சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
வரவு - செலவு திட்டத்திற்கு ஆதரவாக 16 வாக்குகளும் எதிராக 22 வாக்குகளும் பதிவாகியுள்ளன.
45 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கும் யாழ். மாநகர சபையில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் 16 உறுப்பினர்களும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் சார்பில் 13 உறுப்பினர்களும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் 9 உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் 3 உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் 2 உறுப்பினர்களும் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் ஒரு உறுப்பினரும் அங்கம் வகிக்கின்றனர்.
இன்று நடைபெற்ற வரவு - செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டதால் சபை தானாகவே கலைந்து விடும் எனக் கருதப்படுகின்றது.
அத்துடன், மீண்டும் ஒரு வாக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு வாய்ப்புக்கள் இல்லை என்றும் இந்த வாக்கெடுப்பு நடக்காவிட்டாலும் கூட இன்னும் 19 நாட்களில் உள்ளூராட்சி சபையின் ஆயுட்காலம் தானாகவே முடிவுக்கு வந்துவிடும் எனவும் கூறப்படுகின்றது.
மாநகரசபை வரவு - செலவு திட்டம் இரண்டு தடவை தோற்கடிக்கப்படுமானால் உள்ளூராட்சி சட்டங்களுக்கு அமைய மாநகர முதல்வர் தானாக பதவி இழந்ததாகவே கருதப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.