யாழ். உள்ளக அரங்கு அமைக்க விதிக்கப்பட்ட தடை குறித்து எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்
யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் உள்ளக விளையாட்டு அரங்கு அமைப்பதற்கு எதிராக யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றம் விதித்த இடைக்காலக் கட்டாணை இன்றுடன் முடிவடைந்தது. அதை யாழ்ப்பாணம் நீதிமன்றம் நீடிக்கவில்லை.
இந்த இடைக்கால கட்டாணையைக் கடந்த தவணையில் இரண்டு வாரங்களுக்கு வழங்கியிருந்த யாழ். மாவட்ட நீதிபதி சுப்ரமணியம் சிவகுமாரன் இன்று நீதிமன்றத்துக்குச் சொந்த விடுமுறை காரணமாக வரவில்லை.
எனினும், இன்றைய திகதியிட்டு இந்த வழக்கையொட்டி அவர் வழங்கிய உத்தரவு ஒன்றை பதில் நீதிபதி நீதிமன்றத்தில் வாசித்தார். ஏற்கனவே வழங்கப்பட்ட கட்டாணை இன்றைய திகதியில் முடிவடைய இருக்கும் நிலையில் அதனைத் தான் தொடர்ந்து நீடிக்கவில்லை என்ற உத்தரவை அதில் நீதிபதி சுகுமாரன் தெளிவுபடுத்தி இருந்தார்.
ஏற்கனவே வழங்கப்பட்ட கட்டாணை தொடர்பில் சட்டநுட்ப விடயங்கள் சிலவற்றை மேற்கோள்காட்டி தாம் அந்தக் கட்டணையைத் தொடர்ந்து நீடிக்கவில்லை என்று அவர் அந்த உத்தரவில் தெரிவித்திருந்தார்.
தாக்கல் செய்யப்பட்ட மனு
இதேசமயம், இந்த வழக்கில் இடையீட்டு வழக்காளியாகத் தம்மையும் சேர்த்துக் கொள்ளச் சொல்லி யாழ்ப்பாணம் மாநகர சபையின் பிரதி மேயர் இமானுவேல் தயாளன் தாக்கல் செய்த மனுவை அவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி கேசவன் சயந்தன் இன்று மன்றில் சமர்ப்பித்தார். அதனை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

அதனால் இந்த வழக்கில் அடுத்த வழக்காளியாக இமானுவேல் தயாளன் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கின்றார். எதிராளியாக முன்னிலையான யாழ். மாவட்ட அரச அதிபர் தாங்கள் இந்த வழக்கில் தங்களுக்காக முன்னிலையாகும்படி சட்டமா அதிபரைக் கோரியிருக்கின்றார்கள் எனவும், அவருடைய வழிகாட்டுதல் இன்னும் கிடைக்கவில்லை என்றும் மன்றுக்குத் தெரிவித்தார்.
கட்டாணையை நீதிமன்றம் நீடிக்காத காரணத்தால் தாங்கள் கட்டட வேலையைத் தொடர முடியுமா என்று அவர் மன்றிடம் கோரினார். மன்று அது தொடர்பில் வழிகாட்டுதல் எதனையும் வழங்கவில்லை.
அப்போது மனுதாரர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், "நீதிமன்றம் வழங்கிய கட்டாணை நீடிக்கப்படவில்லையே தவிர, இந்தக் கட்டட வேலைக்கு எதிராக நாங்கள் நீதிமன்றத்திடம் கோரிய இடைக்காலத் தடையுத்தரவுக் கோரிக்கை இன்னும் நீதிமன்றப் பரிசீலனையிலேயே இருக்கின்றது. அந்தப் பின்புலத்தில் கட்டட வேலை ஆரம்பிக்கப்பட்டால், உரிய நடவடிக்கைகளை நாங்கள் எடுப்போம்." - என்று மன்றில் தெரிவித்தார்.
அதேசமயம் கட்டாணை நீடிக்கப்படாமல் யாழ். மாவட்ட நீதிமன்ற நீதிபதி வழங்கிய உத்தரவுக்கு எதிராக தாங்கள் உடனடியாக வடக்கு மாகாண மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனுத் தாக்கல் செய்ய இருக்கின்றனர் என்றும் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் தெரிவித்தார்.
வழக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 29ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. வழக்காளி சார்பில் சட்டத்தரணி சிந்துஜனின் அனுசரணையுடன் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையானார்.
பிக் பாஸ் வீட்டிற்குள் 24 மணி நேரம் தங்கும் போட்டியாளரின் பெற்றோர்! இந்த வாரம் வெளியேறுவது யார்? Manithan