யாழில் பெரும் சோகம்! தந்தையின் உயிரைப் பறித்த விபத்து..
யாழ்ப்பாணம் – அரியாலை புங்கன்குளம் பகுதியில் தொடருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இன்று(23) ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், பாடசாலை மாணவி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
யாழ். மாவட்ட செயலகத்தில் பணியாற்றும் நாகராசா சூரியகுமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பொலிஸார் விசாரணை
இன்று (23) மதியம் புங்கன்குளம் பகுதியில் தொடருந்து பயணித்துக்கொண்டிருந்தபோது, தொடருந்துக் கடவையை மோட்டார் சைக்கிளில் கடக்க முற்பட்ட வேளையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், அவருடன் பயணித்த அவரது மகளான பாடசாலை மாணவி படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை, விபத்து இடம்பெற்ற தொடருந்துக் கடவையில் நீண்ட காலமாக ஊழியர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படவில்லை எனவும், ஒலி சமிக்ஞை உரிய முறையில் இயங்குவதில்லை எனவும் அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
குறித்த கடவை பாதுகாப்பற்ற நிலையில் காணப்படுவதால் அடிக்கடி விபத்துக்கள் இடம்பெறுவதாகவும் தெரிவித்துள்ள மக்கள், இதுதொடர்பில் உரிய அதிகாரிகள் இனியாவது கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.