யாழில் தந்தை - மகன் உயிரை பறித்த கோர விபத்து.. விசாரணையில் அம்பலமான ஆள்மாறாட்டம்
சாவகச்சேரி பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை தந்தையும், 9 வயது மகனும் வாகன பலியான விபத்தில், சாரதி ஆள்மாறாட்டம் இடம்பெற்றுள்ளமை பொலிஸ் விசாரணைகளில் அம்பலமாகியுள்ளது.
மட்டுவில் தெற்கைச் சேர்ந்த செல்வத்துரை செல்வராஜ் (51) மற்றும் அவரது மகன் செல்வராஜ் டிசாந்த் (09) ஆகியோர் உயிரிழந்த இவ்விபத்தின் பின்னர், வாகனத்தில் இருந்தவர்கள் தப்பிச் சென்றிருந்தனர்.
அன்றைய தினம் இரவே 24 வயதுடைய இளைஞன் ஒருவர் தானே சாரதி எனப் பொலிஸில் சரணடைந்த நிலையில், அவர் மதுபோதையில் இருந்தமை உறுதிப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
ஆள்மாறாட்டம்
இதேவேளை, விபத்து இடம்பெற்றவுடன் நிறைபோதையில் இருந்தவர்கள் தப்பிச் சென்றதாகவும், சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் எவ்வித விசாரணைகளுமின்றித் தொலைபேசி அழைப்பொன்றின் அடிப்படையில் வாகனத்தின் 'ரிமோட்' திறப்பை எடுத்து வாகனத்தை அப்புறப்படுத்தியதாகவும் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் பிரதேசவாசிகள் சாவகச்சேரி பொலிஸ் நிலையம் முன்பாகக் குற்றம் சாட்டியிருந்தனர்.

இது குறித்துப் பதிலளித்த உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜனக சில்வா, வாகனத்திற்குச் சேதம் ஏற்படுவதைத் தடுக்கவே அவ்வாறு செய்திருக்கலாம் எனவும், குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தரின் தொலைபேசித் தரவுகள் ஆராயப்பட்டு தவறு இழைக்கப்பட்டிருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்திருந்தார்.
இந்நிலையில், பொலிஸார் முன்னெடுத்த தொடர் விசாரணைகளின் அடிப்படையில், விபத்து இடம்பெற்ற நேரத்தில் வாகனத்திற்குள் இருந்த ஐவர் இன்று (15) ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், கைது செய்யப்பட்ட ஐவரில் ஒருவரே உண்மையில் வாகனத்தைச் செலுத்தி விபத்தை ஏற்படுத்தியவர் என்பதும், முன்னதாகச் சரணடைந்த நபர் சாரதி அல்ல என்பதும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, இந்த ஆள்மாறாட்டத்தின் பின்னணியில் உள்ளவர்கள் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.