யாழில் ஒரே நாளில் வெவ்வேறு விபத்துக்களில் உயிரிழந்த மூவர்
யாழ்ப்பாணம்(Jaffna) - றொட்டியாலடி வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பஸ்தர் ஒருவர் திடீரென கிழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவமானது, நேற்று முன்தினம்(22) இடம்பெற்றுள்ளது.
இதன்போது, செட்டிவளவு, இணுவில் மேற்கு பகுதியை சேர்ந்த சபாபதிப்பிள்ளை நித்தியானந்தம்(வயது 65) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் சம்பவதினத்தன்று மாலை மோட்டார் சைக்கிளில் வீதியால் பயணித்துக் கொண்டிருந்தவேளை கீழே மயங்கி விழுந்துள்ளார்.
இதன்போது அந்த வீதியால் வந்தவர்கள் அவரை தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டதுடன் மாரடைப்பு காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.
இரண்டு பிள்ளைகளின் தந்தை
இதேவேளை, யாழ்ப்பாணத்தில் நேற்று முன்தினம்(22) வீதியை கடக்க முற்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் அவர் உயிரிழந்துள்ளார்.
அச்சுவேலி தெற்கு, அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த தயநாதன் விதுசன்(வயது 32) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இவர் சம்பவதினத்தன்று(22) ஆவரங்கால் சந்தியால் வீதியை கடக்க முற்பட்பட்ட போது யாழ்ப்பாணத்தில் இருந்து வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியதில் படுகாயமடைந்துள்ளார்.
படுகாயமடைந்த அவர் அச்சுவேலி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டதுடன் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
அவரை மோதிய மோட்டார் சைக்கிள் சாரதியும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
மூன்று பிள்ளைகளின் தாய்
இதேவேளை, யாழ்ப்பாணத்தில், மூச்சு எடுப்பதற்கு சிரமப்பட்ட பெண் ஒருவர் நேற்றுமுன்தினம்(22) உயிரிழந்துள்ளார்.
இதன்போது மூளாய் - வேரம் பகுதியை சேர்ந்த தர்சன் பாமினி(வயது 36) என்ற மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த குடும்பப் பெண்ணுக்கு நேற்றுமுன் தினம் மூச்சு எடுப்பதில் சிரமம் ஏற்பட்ட நிலையில் அவர் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டதுடன் நாட்பட்ட நுரையீரல் அடைப்பு காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |