பொலிவூட் நடிகை ஜெக்குலின் பெர்னாண்டஸை விசாரணைக்கு வருமாறு அழைப்பு
இலங்கையரான பொலிவூட் நடிகை ஜெக்குலின் பெர்னாண்டஸை விசாரணைக்கு வருமாறு இந்திய புதுடில்லி பொலிஸ் அறிவித்தல் அனுப்பியுள்ளது.
சுகேஷ் சந்திரசேகருடன் தொடர்புடைய பல கோடி ரூபாய் பணமோசடி வழக்கில் தொடர்பில் 2022, செப்டம்பர் 12 ஆம் திகதி விசாரணைக்கு வருமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதே வழக்கில் செப்டம்பர் 26ம் திகதி முன்னிலையாகுமாறு அவருக்கு புதுடில்லி நீதிமன்றம் ஏற்கனவே அறிவித்தலை அனுப்பியுள்ளது.
200 கோடி ரூபாய் மோசடி
200 கோடி ரூபாய் பணத்தை அச்சுறுத்தி பறித்ததாக சுகேஸ் சந்திரசேகருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், ஜெக்குலின் பெர்னாண்டஸை குற்றவாளியாக அறிவித்த நிலையிலேயே டில்லி நீதிமன்றம் அவருக்கு அறிவித்தலை அனுப்பியுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபரில் இடம்பெற்ற விசாரணையின்போது, சுகேஸ் சந்திரசேகர் தம்மை, சன் டிவியின் உரிமையாளர் என்றும் ஜெயலலிதாவின் மருமகன் என்றும் அறிமுகப்படுத்தியதாக ஜெக்குலின் தெரிவித்திருந்தார்.
முன்னதாக மருந்து உற்பத்திதுறையின் விற்பனையாளர்களான ரன்பாக்ஸியின் முன்னாள் விளம்பரதாரர்களான அதிதி சிங் மற்றும் ஷிவேந்தர் சிங் ஆகியோரிடம் இருந்து சுமார் 215 கோடி பணம் பறித்ததாக சந்திரசேகரை புதுடெல்லி பொலிஸார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் சந்திரசேகரின் மனைவி லீனா மரியா பால், நண்பரான பிங்கி இரானி உட்பட 8 பேரை இதுவரை கைது செய்த புலனாய்வு அமைப்பு குற்றப்பத்திரிகைகளையும் தாக்கல் செய்துள்ளது.
இந்த குற்றப்பத்திரிகையில், சந்திரசேகர் மோசடி செய்ததாகக் கூறப்படும் பணத்தை எவ்வாறு பயன்படுத்தினார் என்று குறிப்பிட்டுள்ளது.
விலையுயர்ந்த பொருட்கள்
அவர் மோசடி செய்த தொகையில் இருந்து 5.71 கோடி ரூபா பெறுமதியான விலையுயர்ந்த பொருட்களை ஜெக்குலினுக்கு பரிசாக வழங்கினார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் குற்றத்தின் அடிப்படையில் கிடைத்த வருமானத்தில் இருந்து பரிசுகள்
வாங்கப்பட்டதை நடிகை ஜெக்குலின் அறிந்திருந்ததாக விசாரணையாளர்கள் குற்றம்
சாட்டியுள்ளனர்
எனினும் ஜெக்குலின் 'சதியால் பாதிக்கப்பட்டவர்' என்று அவரது சட்டத்தரணி
குறிப்பிட்டுள்ளார்.